×

ரஜினி மீது வழக்கு பதிய கோரிய மனுக்கள் வாபஸ் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றும் ஆட்சிதான் நடக்கிறது: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: பெரியாரின் திராவிடக் கொள்கைகளை பின்பற்றும் ஆட்சிதான் இங்கு நடக்கிறது என்று கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர உத்தரவிடக்கோரிய மனுக்களை வாபஸ் பெற அனுமதித்து மனுக்களை தள்ளுபடி செய்தது. நடிகர் ரஜினிகாந்த் திராவிடர் கழகம் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்தார். இதையடுத்து, ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி திருவல்லிக்கேணி போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் உமாபதி வழக்கு தொடர்ந்தார்.

இதேபோல், ரஜினிகாந்த் மீது தான் காட்டூர் போலீசில் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிடக்கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்ட தலைவர் நேருதாசும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுக்கள் நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, பெரியார் மிகப்பெரிய தலைவர். அவர் வகுத்த கொள்கைகளின்அடிப்படையில்தான் தமிழகத்தில் ஏராளமான திராவிட கட்சிகள் உருவாகியுள்ளன. அப்படிப்பட்ட தலைவர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் இதுபோன்ற கருத்து தெரிவித்து இருக்கக்கூடாது. அவர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மனுதாரர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

அந்த புகாரை போலீசார் பரிசீலிப்பதற்கு முன்பே இருவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்று வாதிட்டார். நீதிபதி, இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயர்போலீஸ் அதிகாரியிடம் மனு கொடுத்து அவரும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வழக்கு தொடர முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. நடவடிக்கை எடுக்க கால அவகாசம் தராமல் வழக்கு பதிவு செய்யக்கோரி மனு தாக்கல் செய்ய முடியாது என்றார். நீதிபதி, மனுக்களை தள்ளுபடி செய்தார். அப்போது நீதிபதி, பெரியாரின் திராவிட கொள்கைகளை கொண்ட கட்சித்தான் இங்கு ஆட்சியில் இருக்கிறது. ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதனால், ரஜினிகாந்த் கூறிய கருத்துகள் தொடர்பான பிரச்னைகளை அரசு பார்த்துக் கொள்ளும். நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று கருத்து தெரிவித்தார்.

Tags : Petitions ,Rajini ,Supreme Court ,Pope ,Periyar ,High Court , Rajini, Case, Petitions, Return, Periyar, Policy, Governance, High Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...