×

வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதில் நூதன மோசடி: அரசுக்கு வருவாய் இழப்பு

தாம்பரம்: கிழக்கு தாம்பரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதில் நூதன வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளிலிருந்து கிழக்கு தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை வழியாக சேலையூர், கேம்ப் ரோடு, திருவஞ்சேரி, மப்பேடு, செம்பாக்கம், சந்தோஷபுரம், மேடவாக்கம், வேளச்சேரி, ஓ.எம்.ஆர், இ.சி.ஆர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள், கல்லூரிகளுக்கு என தினமும் லட்சக்கணக்கானோர் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இவ்வாறு வாகனங்களில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்கள், சிக்னலை மீறி செல்பவர்கள், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டிச் செல்பவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் என போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை காலை மற்றும் மாலை நேரங்களில் கிழக்கு தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில், கிழக்கு தாம்பரம் மின்வாரிய அலுவலகம் அருகே போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்து அபராதம் விதிக்கின்றனர்.

இதேபோல், ஓட்டுனர் உரிமம், ஆர்.சி புக், இன்சூரன்ஸ் ஆகியவை இருந்தாலும், ஏதாவது ஒரு காரணத்தை கூறி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு விதிக்கப்படும் அபராத தொகையையும் போக்குவரத்து போலீசார் பணமில்லா பரிவர்த்தனை என்ற டிஜிட்டல் முறையில் முழுமையாக வசூலிப்பதில்லை. மாறாக, விதிக்கப்படும் அபராத தொகையில் ஒரு பகுதியை மட்டும் பணமில்லா பரிவர்த்தனையில் பெற்றுக்கொண்டு, மீதமுள்ள தொகையை வாகன ஓட்டிகளிடம் இருந்து கையில் ரொக்கமாக பெற்று வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு பணம் வசூலிப்பதை யாரும் பார்த்துவிட கூடாது என்பதால், வாகன ஓட்டிகளிடம் இருந்து ஓட்டுநர் உரிமத்தை பெறுவது போல், அதன் அடியில் வைத்து மறைத்தபடி பணத்தை நாசூக்காக பெற்று வருகின்றனர்.

இதில், குறைந்த பணம் வைத்துள்ள வாகன ஓட்டிகளிடம், எங்களுக்கு ஜூஸ் வாங்கிக் கொண்டுவந்து கொடுக்க வேண்டுமென வற்புறுத்தி வருகின்றனர் என வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் பணமில்லா பரிவர்த்தனை என்ற டிஜிட்டல் முறையில் தான் அபராதம் வசூலிக்க வேண்டும். இந்த திட்டம் வாயிலாக அபராத தொகையை போலீசார் நேரடியாக வாங்கவே கூடாது. 24 மணி நேரத்தில் வங்கிகளின் கடன் மற்றும் பற்று அட்டைகள், இ-சேவை மையங்கள், பேடிஎம், அஞ்சலகம் உள்ளிட்ட ஆறு வகைகளில் அரசுக்கு அபராத தொகையை செலுத்த வேண்டும். ஆனால், போக்குவரத்து போலீசார், அபராத தொகையில் ஒரு பகுதியை மட்டும் டிஜிட்டல் முறையில் வசூலித்துவிட்டு, மீதமுள்ள பணத்தை வாகன ஓட்டிகளிடம் இருந்து கையில் ரொக்கமாக பெறுகின்றனர்.

இதனால், போக்குவரத்து போலீசாரின் காட்டில் தினமும் பணமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதிக பாரம் ஏற்றி செல்வது, அதிவேகம் செல்வது, குடிபோதை வாகன ஓட்டுவது, அதிக உயரத்தில் பாரம் ஏற்றி செல்வது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, ஆர்.சி புக் இல்லாமல் இருப்பது, இன்சூரன்ஸ் இல்லாமல் இருப்பது, செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டி செல்வது, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்பவர்கள் என மடக்கிப்பிடித்து அவர்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறு பெறப்படும் பணத்திற்கு போலீசார் சார்பில் இருந்து எந்த ஒரு ரசீதும் வாகன ஓட்டிகளுக்கு கொடுப்பதில்லை. இதனால், அரசுக்கு லட்சக்கணக்கில் இழப்பீடு ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : Traffic Police ,Loss ,Government Vehicle Tests ,Government , Vehicle inspection, traffic cops, fines, fraud
× RELATED சென்னை வரும் பிரதமர் மோடி;...