×

ஆவணங்கள் தராமல் திகார் சிறை தாமதம்: நிர்பயா குற்றவாளிகள் 2 பேர் மீண்டும் மனு

புதுடெல்லி: மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை வழங்குவதில் திகார் சிறை அதிகாரிகள் தாமதம் செய்வதாக நிர்பயா தூக்கு தண்டனை குற்றவாளிகள் அக்‌ஷய் குமார், பவன் குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மற்றொரு இளம் குற்றவாளிகக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங், அக்‌ஷய் குமார் சிங் மற்றும் பவன் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் 4 பேருக்கும் பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட  சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில், குற்றவாளிகள் அக்‌ஷய் குமார் சிங், முகேஷ் சிங் சார்பில் வழக்கறிஞர் ஏபி சிங், டெல்லி நீதிமன்றத்தில் நேற்று புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘அக்‌ஷய் குமார் சிங், பவன் சிங் ஆகியோருக்கு மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்களை வழங்குவதற்கு திகார் சிறை அதிகாரிகள் தாமதம்  செய்கின்றனர்,’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 1ம் ேததி நிறைவேற்றப்பட உள்ள தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் நோக்கத்தில் இந்த புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மிருகம் போன்றவர்கள் :  ஹேங்மேன் பேட்டி
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டை சேர்ந்த ஹேங்மேன் பவன் குமார் என்பவர் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இருக்கிறார். இதனால், இவரை பேட்டி எடுக்க ஊடகங்களும், பத்திரிக்கைகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பவன் குமார் அளித்துள்ள பிரத்யேக பேட்டி ஒன்றில், “குற்றவாளிகள் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் போவது பற்றி எனக்கு பூஜ்யம் அளவு கூட எந்த அனுதாபமும் கிடையாது. அவர்கள் கொடூரமானவர்கள். அதனால் தங்கள் வாழ்க்கையை இழக்க போகிறார்கள். இந்த 4 பேரும் மிருகங்களை போன்றவர்கள். அவர்கள் மனிதர்கள் கிடையாது. தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் குற்றங்கள் குறையும்.

ஆயுள் தண்டனை கொடுத்தால், அவர்கள் மேல்முறையீடு செய்து வெளியே வருவார்கள். மேலும், பல குற்றங்களை செய்வார்கள். இதுபோன்றவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். இது மற்றவர்களுக்கு பாடமாக அமையும்,’’ என்றார். இவரது குடும்பத்தினர்  கடந்த 3 தலைமுறைகளாக தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர்களாக இருந்து வருகின்றனர். 3 தலைமுறைகளாக இதை செய்த போதிலும், பவன் குமார் நிறைவேற்றப்பட உள்ள முதல் தூக்கு தண்டனை இதுவாகும். பவன் குமாரின் தாத்தா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொன்றவர்கள் மற்றும்  1982ம் ஆண்டு கடத்தல் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகள் இரண்டு பேரை தூக்கிலிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Tihar Jail , Documents, Dikar Prison, Nirbhaya Criminals
× RELATED என் பெயர் கெஜ்ரிவால்.. நான் தீவிரவாதி...