×

எம்.எஸ்.சுப்புலட்சுமி உட்பட 10 பெண் பிரபலங்கள் பெயரில் பல்கலை.களில் புதிய இருக்கை

புதுடெல்லி: கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி உட்பட 10 பெண் பிரபலங்கள் பெயரில், பல்கலைக் கழகங்களில் புதிய இருக்கைகள் அமைக்கப்படுகிறது. தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், கர்நாடக இசை பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமி, ஹோல்கர் ராணி தேவி அகிலாபாய் ஹோல்கர், இலக்கியவாதி மகாதேவி வர்மா, வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி கைதின்லியு, டாக்டர் ஆனந்திபாய் போல்ராவ் ஜோஷி, வன பாதுகாவலர் அமிர்தா தேவி பெனிவால், கணித மேதை லீலாவதி, விஞ்ஞானி கமலா சேகோனி, கவிஞர் லால் டெட் மற்றும் கல்வி சீர்திருத்தவாதி ஹன்சா மேத்தா ஆகிய பிரபலங்கள் பெயரில் பல்கலைக் கழகங்களில் புதிய இருக்கை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கை ஒவ்வொன்றுக்கும் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும். இந்த இருக்கைகளை அமைக்க மொத்தம் ரூ.5 கோடி செலவாகும். இது, கல்வி, ஆராய்ச்சி மற்றும் கல்வி மேம்பாட்டு பணிகள், ஆராய்ச்சிகளில் ஈடுபடும். இந்த இருக்கைகள் 5 ஆண்டுகள் செயல்படும்.


Tags : universities ,celebrities , MSSupulakshmi, 10 Female, Celebrities, Univers., New Seat
× RELATED ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கைக்கான ஒப்பந்தம் புதுப்பிப்பு