×

பிரதம மந்திரி திட்டத்தில் இலவச வீடு தருவதாக வதந்தி

* திரளாக குவிந்தவர்களால் பரபரப்பு
* ராஜபாளையம் அருகே சாலை மறியல்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே பிரதமர் மந்திரி திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதாக பரவிய வதந்தியால், நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சுருளியாண்டி. பாஜ உறுப்பினர். இவர் மீனாட்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், ‘‘வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச வீடு வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து கலெக்டர், முதல்வர், பிரதமருக்கு பல முறை கடிதம் எழுதி உள்ளேன். விரைவில் வீடுகள் வழங்கப்படும்’’ என கூறி வந்தார். இதனிடையே அதிகாரிகள் மனு வாங்க வர உள்ளதால், கிராமத்திற்கு 10 பேர் வீதம் மனுக்களுடன் மொட்டை மலைக்கு வர வேண்டும் என நேற்று சுருளியாண்டி கூறியுள்ளார். இவரது பேச்சை நம்பி நூற்றுக்கணக்காக மக்கள் நேற்று காலை மொட்டைமலையில் குவிந்தனர். ஆனால் அங்கு அதிகாரிகள் யாரும் மனு வாங்கவில்லை. இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது.

தகவலறிந்த வன்னியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பொதுமக்களிடம் விசாரித்தபோது, நடந்த சம்பவத்தை கூறினர். அதற்கு போலீசார், ‘‘அது போன்று நிகழ்ச்சி ஏதும் இல்லை. உடனே கிளம்புங்கள்’ என தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இலவச வீடு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார், மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருவில்லிபுத்தூர் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்தார். அவரிடம் பொதுமக்கள் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் 3 மணி நேரம் மொட்டை மலை பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இதுகுறித்து திருவில்லிபுத்தூர் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்த குமாரிடம் கேட்டபோது, ‘‘தனி நபரிடம் பட்டாவுடன் நிலம் இருக்கும் பட்சத்தில், அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் நிதி வழங்குகிறது. இந்த திட்டம் குறித்து பொதுமக்களிடம் தவறான தகவல் வதந்தியாக பரவியதால் பெண்கள் குவிந்தனர்’’ என்றார்.

Tags : home , Prime Minister, plan, free house, gossip
× RELATED வதந்தியை பரப்புவோர்,பொதுசேவைகளை...