×

தீவிரவாதிகளின் கைப்பையும் கிடைத்தது எஸ்.எஸ்.ஐ. கொலைக்கு பயன்படுத்திய கத்தி சிக்கியது: ஐ.எஸ். இயக்க தொடர்பு அம்பலம்

நாகர்கோவில்: குமரி எஸ்.எஸ்.ஐ. கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த கைப்பை சிக்கியது. குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான, தீவிரவாதிகள் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவிலை சேர்ந்த தவுபிக் ஆகியோரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து, குமரி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை கண்டுபிடிப்பதற்காக கடந்த 23ம்தேதி  இவர்களை கேரள மாநிலத்துக்கு அழைத்து சென்றனர்.  எர்ணாகுளத்தில்கழிவு நீர் ஓடையில் வீசப்பட்டு இருந்த துப்பாக்கியை போலீசார் மீட்டனர்.

இது இத்தாலி தயாரிப்பு பிஸ்டல் ஆகும். அதில் ‘ஒன்லி பார் ஆர்மி யூசேஜ்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. ராணுவ பயன்பாடு துப்பாக்கி தீவிரவாதிகள் கைவசம் எவ்வாறு வந்தது என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வில்சன் உடலில் இருந்தும், சம்பவ பகுதியில் இருந்தும் எடுக்கப்பட்ட தோட்டாக்கள், இந்த துப்பாக்கியுடன் பொருந்துகிறதா? என்பதை கண்டுபிடிக்கும் வகையில் தடயவியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை பெங்களூருக்கு கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணை முடிந்த பின், இரு தீவிரவாதிகளையும் நேற்று முன் தினம் இரவு  நாகர்கோவில் கொண்டு வந்தனர்.

பின்னர் நேற்று காலை மீண்டும் விசாரணைக்காக திருவனந்தபுரம் அழைத்து சென்றனர். கொலையாளிகள் எஸ்.எஸ்.ஐ. வில்சனை துப்பாக்கியால் சுட்டது மட்டுமில்லாமல், கத்தியாலும் உடலில் வெட்டி இருந்தனர். எனவே அந்த கத்தியை எங்கு போட்டுள்ளனர் என்பது பற்றி விசாரணை நடத்தினர். திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஓடையில் வீசியதாக இருவரும் கூறினர். இதையடுத்து அந்த ஓடையில் சோதனை நடந்தது. அப்போது ஓடை அருகில் உள்ள புதருக்குள் கிடந்த கத்தியை போலீசார் மீட்டனர். இந்த கத்தி, தீவிரவாதிகள் பயன்படுத்திய கத்தி என்பதும் உறுதியானது. இதையடுத்து நெய்யாற்றின்கரைக்கு அழைத்து சென்றனர். ஏற்கனவே நெய்யாற்றின்கரை பகுதியில் கொலை நடந்த அன்று காலை அப்துல் சமீம், தவுபிக் இருவரும் கையில் மர்ம பேக்குடன் சுற்றி திரிந்தனர். அந்த பேக்கை, ஜாபர் என்பவரிடம் ஒப்படைத்ததாக கூறினர். இதையடுத்து ஜாபரிடம் இருந்து பேக்கை போலீசார் கைப்பற்றினர். அதில் துண்டு சீட்டுகள் இருந்தன.

அந்த துண்டு சீட்டில் நாங்கள் இஸ்லாமிய போராளிகள். இஸ்லாம் இந்தியாவில் வரும் வரை போராடுவோம். ஐ.எஸ்.ஐ. என்றும், இஸ்லாம் நாடு  இந்தியா என்று எழுதப்பட்டு இருந்தது. மற்றொரு துண்டு சீட்டில் தலைவர் காஜா பாய் என இருந்தது. அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.. எஸ்.பி. ஸ்ரீநாத் பேட்டி: விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. கணேசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஐ.எஸ். இயக்கத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருந்ததா? என்பது பற்றி விசாரணைக்கு பின்னரே தெரிய வரும்’ என்றார். முன்னதாக எஸ்.பி. ஸ்ரீநாத் கூறுகையில், ‘எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலையில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. தேவைப்படும் பட்சத்தில் பெங்களூரில் கைதான இஜாஜ் பாட்சா, டெல்லியில் கைதான காதர் மொய்தீன் உள்ளிட்டோரை காவலில் எடுப்போம். விசாரணைக்கு பின்னரே எதையும் உறுதியாக கூற முடியும்’ என்றார்.

Tags : handgun ,Militants ,murder , Terrorists, handbags, SSIs, murder, knives, ISIS Operational communication, exposure
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...