×

தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கடற்கரையில் பக்தர்கள் குவிந்தனர்: புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ் மாத அமாவாசைகளில் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாத அமாவாசைகள் சிறப்பானதாக கருதப்படுகின்றன. இந்த நாட்களில் தங்களது மூதாதையர்களுக்கு எள், தண்ணீர் வைத்தும், பிண்டம் வைத்தும் வழிபாடு நடத்தினால் அவர்களின் ஆன்மா சாந்தி அடைவதோடு தங்கள் குடும்பத்தில் உள்ள தீமைகள் விலகி நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த நாளில் நீர்நிலைகளில், நதிக்கரையோரங்களிலும் இவ்வாறு வழிபாடு நடத்துவது வழக்கம்.

தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலில் நேற்று காலை 10 மணிக்கு மேல் ஸ்ரீராமர் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்தக் கடற்கரை மண்டகப்படிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து  தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கி ஸ்ரீராமர் அருள் பாலித்ததை தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில்  புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்து வழிபட்டனர். பின் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். காவிரி கரை: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், கருடமண்டபம் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஈரோடு மாவட்டம் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுதநதி சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் மூத்தோர் வழிபாடு நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, காவிரியில் புனித நீராடினர். முக்கடல் சங்கம்: முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி சங்கிலித்துறை கடலில் ஏராளமான பக்தர்கள் நேற்று புனித நீராடி முன்னோர்களை நினைத்து பூஜை செய்து தர்ப்பணம் செய்தனர். அதன்பிறகு ஈரத்துணியுடன் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோயில்,  பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Pilgrims ,beach ,moon ,Rameshwaram , Thai New Moon, Rameswaram, Beach, Pilgrims, Sacred Stream, Munnar, Darshanam
× RELATED சிம்மம்