×

சேலத்தில் தடையை மீறி ராமர் படத்துடன் ஊர்வலம் சென்ற பாஜகவினர் 50 பேர் கைது: போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

சேலம்: சேலத்தில் தடையை மீறி ராமர், சீதை படத்துடன் ஊர்வலம் சென்ற பாஜகவினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர். சேலத்தில் திராவிடர் கழகம் சார்பில், கடந்த 1971ம் ஆண்டு  தந்தை பெரியார் நடத்திய மூடநம்பிக்கை எதிர்ப்பு ஊர்வலத்தில், இந்து கடவுள்கள் அவமரியாதை செய்யப்பட்டதாக, நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினியின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்ட பாஜ சார்பில், 50 ஆண்டுக்கு பின் அதே நாளான ஜன.24ம் தேதி, ராமர், சீதா படத்துக்கு மாலை சூடி, மேள தாளத்துடன் ஊர்வலம் நடத்தி, அவமரியாதையை போக்குவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று காலை 10 மணிக்கு, சேலம் செவ்வாய்பேட்டை முக்கோணம் சித்தி விநாயகர் கோயில் முன் பாஜகவினரும், இந்து முன்னணியினரும் திரண்டனர்.

பாஜக மாநகர் மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமையில் கோயிலில் ராமர், சீதை, லட்சுமணன், அனுமான் படத்தை வைத்து பூஜை செய்து, ஊர்வலம் நடத்த கோயிலின் முன்பகுதிக்கு தூக்கி வந்தனர். பின்னர், ராமர் படத்திற்கு மாலை சூட்டி, ராமநாமம் முழங்கி சிறப்பு பூஜை செய்தனர். இதில், பாஜக முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணன் கலந்துகொண்டு பேசினார். இதையடுத்து ஊர்வலம் புறப்பட்டது. சில அடி தூரம் சென்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் மாநகர மாவட்ட தலைவர் கோபிநாத், கோட்ட பொறுப்பாளர் அண்ணாதுரை, உள்பட 50 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Tags : activists ,BJP ,Salem , Salem, violation of prohibition, Rama film, procession, BJP, 50 persons arrested
× RELATED 2019 மக்களவை தேர்தலின்போது கொடுத்த...