×

தலைவர் தேர்தலின்போது ஒன்றிய அலுவலகத்தை அதிமுகவினர் தாக்கிய வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி மனு: எஸ்பி பதிலளிக்க உத்தரவு

மதுரை: தலைவர் தேர்தலின்போது வத்திராயிருப்பு ஒன்றிய அலுவலகத்தை, அதிமுகவினர் தாக்கியது தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரிக்கக் கோரிய வழக்கில் எஸ்பிக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், கோட்டையூரைச் சேர்ந்த கண்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய 4வது வார்டு கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். திமுகவிற்கு பெரும்பான்மை இருந்ததால் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். ஜன.11ல் நடந்த தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் என்னை எதிர்த்து அதிமுக சார்பில் ஒருவர் போட்டியிட்டார். எனக்கு ஆதரவாக 7 வாக்குகள் கிடைத்தன. இதனால், நான் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

ஆனால் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டுமென அதிமுகவினர் மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டனர். தற்கொலை செய்வதாகவும் மிரட்டினர். இதற்கு தேர்தல் அதிகாரி ஒத்துழைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தனர். டிஎஸ்பி மூலம் தேர்தல் நடந்த அலுவலக பூட்டை திறந்து உள்ளே புகுந்த அதிமுகவினர் தகராறில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இவர்களுக்கு ஆதரவாக போலீசார் இருந்தனர். எனவே, ஒத்தி வைக்கப்பட்ட தேர்தலை மீண்டும் நடத்தும்போது உரிய பாதுகாப்பு வழங்கவும், அதிமுகவினர் தாக்கியது தொடர்பான வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, மனுவிற்கு விருதுநகர் எஸ்பி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.6க்கு தள்ளி வைத்தார்.


Tags : SP ,attack ,AIADMK ,Union ,CBI ,election ,office , Leader of Elections, Union Office, AIADMK, Attacking Case, CBI Inquiry
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்