×

20 ஆண்டுகளில் இல்லாத அளவு முதல்முறையாக நேரடி வரிகள் வருவாய் கடும் சரிவு

மும்பை: கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் பெரும் சரிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது. இந்தியாவில் கம்பெனிகள் மற்றும் வருமான வரிகள் மூலமாக கிடைக்கும் நேரடி வரி, நாட்டின் பட்ஜெட்டை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த நிதியாண்டில் (2018- 2019) நேரடி வரியாக ரூ.11.5 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டது. இந்தாண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடியும் நடப்பு நிதியாண்டில், நேரடி வரியாக மொத்தம் ரூ.13.5 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டை விட 17 சதவீதம் அதிகமாகும். ஆனால், பொருளாதார மந்தநிலை காரணமாக தொழில்கள் முடக்கம், அதனால் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை குறைத்தது, வேலை இழப்பு ஆகியவை காரணமாக வரி வசூல் கணிசமாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக, இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைய வாய்ப்பு இருப்பதாக அரசு மதிப்பிட்டுள்ளது. இது, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. இந்த ஜனவரி 23ம் தேதி வரையில் வரிகள் துறை ஓரளவு சமாளித்து மொத்தம் ரூ.7.3 லட்சம் கோடி வசூல் செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூல் செய்ததைவிட 5.5 சதவீதம் குறைவாகும். கடந்த 2018-19ம் நிதியாண்டில் இதே காலத்தில் மொத்தம் ரூ.11.5 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டது. அதைவிட சற்று குறைவாக இந்த ஆண்டு வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரி வருவாய் குறைவாக இருந்தால், அரசு திட்டங்களுக்கு செலவிடும் நிதியில் பற்றாக்குறை ஏற்படும். இந்த நிதி நெருக்கடியை சமாளிக்கத்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

* நிதி பற்றாக்குறை ஜிடிபி.யில் 3.5%
இந்த நிதியாண்டில் நிதி பற்றாக்குறை, ஜிடிபி.யில் (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 3.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொருளாதார வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே, பாதுகாப்பு, ரியல் எஸ்டேட் உள்பட பல துறைகளை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல், அன்னிய முதலீடுகள் எதிர்பார்த்த அளவில் இல்லை. எனவே, 2021 நிதியாண்டில் இதன் இலக்கை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.



Tags : 20 years, absenteeism, first-time, direct taxes, earnings-heavy, decline
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்