டெல்லியில் ‘ஒய்’ பிரிவு; மகாராஷ்டிராவில் ‘இசட்’ பிளஸ்: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் சிறப்பு பாதுகாப்பு வாபஸ்

புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளதாக கட்சியின் தேசிய செயலாளர் தெரிவித்தார். தலைநகர் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின்  தலைவரும், எம்பி-யுமான சரத் பவாருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. டெல்லியின் 6, ஜன்பத் இல்லத்தில் சரத் பவார் வசித்து வரும் நிலையில், அவரது வீட்டுக்கு முன்பாக நிறுத்தப்பட்ட பாதுகாப்புப்  பணியாளர்கள் கடந்த நான்கு நாட்களாக வரவில்லை என்று அக்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கட்சியின் தேசிய செயலாளர் ஹேமந்த் தக்லே கூறுகையில், “சரத் பவாருக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து எந்தவொரு  அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளும் எங்களுக்கு கிடைக்கவில்லை. டெல்லியில் அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் அவருக்கு ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதுதொடர்பாக மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி அமைச்சரும், செய்தித் தொடர்பாளருமான நவாப் மாலிக் கூறுகையில், “சரத்பவாருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டால், அது பழிவாங்கல் அரசியலைத் தவிர  வேறில்லை. அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை அச்சுறுத்தல் இருக்கிறது. அவர்கள் எங்களை பயமுறுத்த விரும்பலாம். ஆனால் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, சரத்பவார் தன்னையும் அவரது மருமகன் அஜித் பவாரையும் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை இயக்குநரகம் பதிவு செய்த வழக்கிற்காக, டெல்லிக்கு முன் தலைவணங்க மாட்டேன்  என்று கூறியிருந்தார். நீதிபதி லோயா மரண வழக்கை மீண்டும் மாநில அரசு விசாரிக்கும் என்று சரத்பவார் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு டெல்லியில் வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

Related Stories:

>