×

பவானி கூடுதுறையில் புனித நீராடி தை அமாவாசை பரிகார வழிபாடுகள்: பக்தர்கள் குவிந்தனர்

பவானி: ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு   ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு எள், தண்ணீர் கொடுத்தும்,  பிண்டம் வைத்தும் பரிகார வழிபாடுகள் நடத்தினர்.தமிழ் மாத அமாவாசைகளில் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாத அமாவாசைகள் மிகச் சிறப்பானதாக கருதப்படுகின்றன. இந்த நாட்களில் தங்களது மூதாதையர்களுக்கு எள், தண்ணீர் வைத்தும், பிண்டம் வைத்தும் வழிபாடு நடத்தினால் அவர்களின் ஆன்மா சாந்தி அடைவதோடு தங்கள் குடும்பத்தில் உள்ள தீமைகள் விலகி நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இந்நாளில் நீர்நிலைகளில், நதிக்கரையோரங்களிலும் இவ்வாறு வழிபாடுகள் நடத்துவது வழக்கம். காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுதநதி  சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் மூத்தோர் வழிபாடு இன்று நடைபெற்றது. இதில், ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே வந்திருந்தனர்.  சிறப்பு வழிபாடுகள் நடத்திய பின்னர் ஆற்றில் எள் தண்ணீர் விட்டும் பிண்டங்களை கரைத்தும் மூதாதையர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை மேற்கொண்டனர். தொடர்ந்து காவிரியில் புனித நீராடினர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பக்தர்கள் உற்சாகமாக புனித நீராடினர். குடும்பம் குடும்பமாக பரிகார பூஜைக்கு வந்த பக்தர்கள் கிழக்கு வாசல் படித்துறை, பரிகார மண்டபம் ஆகிய இடங்களில் உற்சாகமாக நீராடி திரும்பினர். பக்தர்கள் கூட்டத்தை முன்னிட்டு பவானி டிஎஸ்பி சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் ஆழமான பகுதிகள் மூழ்கி உயிர் இழப்பைத் தடுக்கும் வகையில் தீயணைப்பு படையினரும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து, பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் சங்கமேஸ்வரர், வேதநாயகி மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். இதனால் கோயில் வளாகம் பக்தர்களால் நிறைந்து காணப்பட்டது.



Tags : Bhavani Ghatuduram ,devotees ,Bhavani , Devotees gathered at Bhavani nestur
× RELATED திருப்பதி கோயிலில் வசந்த உற்சவம்...