×

சீனாவில் இருந்து மும்பை திரும்பிய இருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி..: தனியார் மருத்துவமனையின் தனி வார்டில் சிகிச்சை!

மும்பை: சீனாவில் இருந்து மும்பை திரும்பிய 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. முதலில் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது. வூஹான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. அந்நாட்டுக்கு பயணம் செய்வது பற்றி இந்தியா முன்பே எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வூஹான் நகரில் மருத்துவம் மற்றும் பிற படிப்புகளை படித்து வரும் 700 இந்திய மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் விடுமுறையை முன்னிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

இந்த நியைில், பாதுகாப்பு நடவடிக்கையாக மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு சீனாவில் இருந்து வரும் பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டதில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் மும்பை சின்ச்போகாலி பகுதியில் உள்ள கஸ்தூர்பா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தனி வார்டு அமைத்து அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய பேசிய பிரஹன் மும்பை மாநகராட்சியின் சுகாதார அதிகாரி டாக்டர் பத்மஜா கேஸ்கர், அந்த இருவருக்கும் லேசான இருமல் மற்றும் சளி அறிகுறி இருப்பதாகவும், முதலில் அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு தனி வார்டில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


Tags : Two People Under Watch ,Ward Of Private Hospital ,Mumbai , China, Mumbai, Corona Virus, Airport
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!