×

பெண் சிசு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்: நாமக்கல்லில்,  பெண் சிசுக்களை காப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. நாமக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில், நேற்று காலை சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் (பொ) சாந்தி தலைமையில், பெண் சிசுக்களை காப்போம், என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெயந்தி, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் கவிதா, மல்லிகா மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் நர்சிங்  பயிற்சி கல்லூரி மாணவ, மாணவியர்  கலந்து கொண்டனர். முன்னதாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியும் செயல்களில் டாக்டர்கள் ஈடுபடக் கூடாது என்பதை வலியுறுத்தி, இணை இயக்குனர் தலைமையில் டாக்டர்கள் மற்றும் சுகாதார செவிலியர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

பின்னர், விழிப்புணர்வு பேனர்களுடன், நகரில் சிறிது தூரம் பேரணியாக செல்ல முடிவு எடுத்து, மருத்துவமனை வளாகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். அப்போது மருத்துவமனை  புறக்காவல் நிலைய எஸ்எஸ்ஐ கேசவன், இதுபற்றி நாமக்கல் போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் கொடுத்தார். அனுமதியின்றி காலை நேரத்தில் நகரில் ஊர்வலமாக செல்ல எப்படி அனுமதிப்பது என புறக்காவல் நிலைய போலீசார் யோசித்தனர். அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெயந்தி, புறக்காவல் நிலைய எஸ்எஸ்ஐ கேசவனிடம், போலீஸ் பாதுகாப்பு வேண்டும். பேரணியாக சிறிது தூரம் செல்ல வேண்டும் என கூறினார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆகியோரை கண்காணிப்பாளர் தனது மொபைலில் தொடர்பு கொண்டார். ஆனால் இணைப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே சிறிது தூரம் நடந்து சென்று  விழிப்புணர்வு கோஷம் எழுப்பினர். பின்னர் கலைந்து சென்றனர். பின்னர் திடீரென இணை இயக்குனர், மாவட்ட எஸ்பி அருளரசுவை மொபைலில் தொடர்பு கொண்டு, பேரணியாக செல்ல அனுமதிக்கும்படி கூறினார். எஸ்பி உடனடியாக வாக்கி டாக்கி மூலம் நாமக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஜீப்பில் வேகமாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.

பின்னர், டாக்டர்கள் மற்றும் நர்சிங் கல்லூரி பயிற்சி மாணவ, மாணவியர் மோகனூர் ரோடு, ஸ்டேட் வங்கி வழியாக பேரணியாக சென்றனர். இணை இயக்குனர், கண்காணிப்பாளர் என பொறுப்பான அதிகாரிகள், மாவட்ட தலைமை மருத்துவமனையில் இருந்தும், ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்த முன்கூட்டியே காவல் துறையிடம் அனுமதி பெறவேண்டும் என்ற விழிப்புணர்வு கூட, மருத்துவமனை நிர்வாகத்திடம் இல்லையே எனக்கூறி போலீசார் வேதனை அடைந்தனர்.

Tags : Girl Child Protection Awareness Rally
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...