×

ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் திமுக சார்பில் முறையீடு!

புதுடெல்லி: ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் திமுக சார்பில் முறையிடப்பட்டுள்ளது. முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி தனது அரசு மீதான நம்பிக்கையை நிரூபிக்கும் நிர்பந்தம் ஏற்பட்ட போது, 2017ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், நட்ராஜ், ஆறுக்குட்டி, சின்னராஜ், மனோரஞ்சிதம், சரவணன், மாணிக்கம் மற்றும் மனோகரன் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்த 11 பேரும் அதிமுக கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்தனர். ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர். இதையடுத்து அந்த 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், சபாநாயகரின் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. ஏற்கனவே வழக்கை விரைந்து முடிக்க திமுக தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிட்டும், இதுவரை விசாரிக்கப்படவில்லை. இந்த நிலையில், வழக்கை விரைந்து விசாரிக்க திமுக சார்பில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இன்று தலைமை நீதிபதி பாப்டேவை சந்தித்து வலியுறுத்தியுள்ளார். சபாநாயகர் வழங்கும் கால அவகாசம் தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கி தீர்ப்பை சுட்டிக்காட்டி, எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : DMK ,Chief Justice ,Supreme Court ,hearing ,Disqualification ,AIADMK MLAs , OPS, 11 AIADMK MLAs,disqualification, Supreme Court, DMK, Kapil Sibal
× RELATED மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற...