×

அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் மரம் வெட்டும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தியதால் பரபரப்பு

விருத்தாசலம்: அரசு பள்ளியில் சுவர் ஏறி மரங்களை வெட்டும் பணியில் மாணவர்கள் ஈடுபட்ட சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஏழை, எளிய, நடுத்தர மாணவர்கள் மட்டும் பயிலும் இப்பள்ளியில் போதிய கல்வி வசதி மேம்படாத காரணத்தால் குறைந்த அளவு தேர்ச்சி விகிதம் மட்டுமே பெற்று வருகிறது. இதனால் கடந்த வருடங்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த நிலையில் தற்போது சுமார் 500 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். மேலும் பள்ளியில் கல்வி மிகவும் பின்தங்கி வந்த காரணத்தினால் பெற்றோர்கள் இப்பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டாமல் தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

மேலும் பள்ளியில் சில பராமரிப்பு பணிகளை மாணவர்களைக் கொண்டு ஆசிரியர்கள் இயக்கி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவர்களைக் கொண்டு பள்ளி கட்டிடத்திற்கு வர்ணம் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதனைத்தொடர்ந்து பள்ளி வகுப்பறை மற்றும் அலுவலக அறைகளில் அவ்வப்போது பூட்டுகள் உடைக்கப்பட்டு திருட்டு நடந்து வந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில், நேற்று பள்ளி கட்டிடத்தில் மேல் பகுதியில் உள்ள மரங்களை வெட்டும் பணியில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்தினர். அப்போது சுமார் 10 அடி உயரம் கொண்ட சுற்று சுவரின் மேல் நின்று கொண்டு மரங்களை மாணவர்கள் வெட்டியது அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் இடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் மின்கம்பத்தில் வயர்கள் மேல் செல்வது தெரிந்தும் மின்சார பயமின்றி மரங்களை மாணவர்கள் வெட்டியது மேலும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர் சிலர் கூறும்போது, இவ்வாறு மாணவர்களை பயன்படுத்தும் போது மாணவர்களுக்கு எந்தவித அசம்பாவிதம் ஏற்பட்டாலும் அதற்கு பள்ளி நிர்வாகம் மற்றும் அரசு நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும். இப்பள்ளியில் மாணவர்களை கையாள்வது குறித்து ஆசிரியர்கள் மீதும் பள்ளி நிர்வாகம் மீதும் மிகுந்த வேதனை அளிக்கிறது. பள்ளி வளாகத்திற்குள் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது. இதுபற்றி பள்ளி நிர்வாகம் கண்டு கொள்வது கிடையாது. எனவே மாணவர்களை வைத்து துப்புரவு பணி, சுகாதார பணி ஆகியவைகள் மேற்கொள்வது பற்றி மாவட்ட கல்வி நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : incident ,government school ,government school students , Shocking incident in government school In the lumbering process Excitement as students get involved
× RELATED கலைத்திறன் போட்டிகளில் மாவட்ட அளவில்...