×

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை, தேர்வர்களுக்கு உதவிய வட்டாட்சியர்கள் கைது : டிஎன்பிஎஸ்சி அதிரடி

சென்னை : குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகுதிநீக்கம் செய்தனர். ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 பேரை  டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்துள்ளது.

குரூப் 4 தேர்வில் முறைகேடு

*தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

*அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 39 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள். அவர்களில் பலர் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக  இருந்ததால், மற்ற தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் 2 மையங்களிலும் தேர்வு எழுதியதாகவும் புகார் கூறப்படுகிறது.

*அதன்பின்னர் இந்த முறைகேடு தொடர்பாக டிஜிபி திரிபாதியிடம் டிஎன்பிஎஸ்சி புகார் அளித்தது. இந்த புகாரை சிபிசிஐடி போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அனுப்பி வைத்தார். அதன்படி சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர்.

*இதனிடையே புகார் அடிப்படையில் 2 மையங்களிலும் தேர்வு எழுதிய வெளி மாவட்டக்காரர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் விசாரித்தது.

99 தேர்வர்கள் தகுதிநீக்கம்

*இந்நிலையில் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடத்திய தேர்வாணையம், முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத டிஎன்பிஎஸ்சி தடை விதித்துள்ளது.

*முறைகேடு எப்படி நடந்தது என்பதையும் தேர்வாணையம் தெளிவுபடுத்தியுள்ளது.மேலும்  சில அதிரடி உத்தரவுகளையும், அறிவுரைகளையும் டிஎன்பிஎஸ்சி வழங்கியுள்ளது.  

2 இடங்களில் மட்டும் தான் முறைகேடு

*மேலும் ராமேஸ்வரம், கீழக்கரையை தவிர வேறு எந்த இடத்திலும் தவறு நடைபெறவில்லை என்பதையும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. தேர்வுக் கூடங்கள், கருவூலங்களை ஆய்வு செய்ததில் 2 மையங்களிலும் முறைகேடு நடந்தது உண்மை என தேர்வாணையம் உறுதி அளித்துள்ளது.

தேர்வர்கள், இடைத்தரகர்கள் மீது எப்ஐஆர் பதிவு , வட்டாட்சியர்கள் கைது

*99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

*குரூப் 4 முறைகேடு தொடர்பாக வட்டாட்சியர்கள் பார்த்தசாரதி, வீரராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பார்த்தசாரதி ராமேஸ்வரம் மையத்திலும், வீரராஜ் கீழக்கரை மையத்திலும் தேர்வு அதிகாரிகள் ஆவர்.

*தேர்வர்கள் காப்பி அடிக்கவும், தேர்வு பதில் தாள் மாற்றிய குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறைகேடு நடந்தது எப்படி?

*இடைத் தரகர்கள் ஆலோசனையில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களை 99 பேரும் தேர்வு செய்தனர்.

*இடைத்தரகர்களிடம் பெற்ற விடைகளை மறையக்கூடிய மையினால் எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.

*தேர்வுப்  பணி ஊழியர்களின் துணையுடன் 52 பேரின் விடைத் தாள்களில் திருத்தம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

*விடைத் தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து விடைத் தாள் கட்டுகளில் சேர்த்து வைத்துள்ளனர்.    

 தேர்வாணையம்  அறிவுறுத்தல்

*வரும் காலங்களில் தவறுகள் நிகழாமல் தடுக்க தேர்வு நடைமுறையில் சீர்திருத்தம் நடந்து வருகிறது.

*தேர்வர்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான முறையில் தேர்வு எழுதுங்கள்.

மோசடி செய்தவர்களுக்கு பதிலாக வேறு 39 பேர் தேர்வு

*தரவரிசைப் பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

*புதிதாக தேர்வான 39 பேரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

*சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியான தேர்வர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும்.


Tags : recruits ,Group 4 ,examination , Group 4 Selection, Abuse, DNPSC, Rameswaram, Down Under, Selectors, Disqualification, Checkpoint
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...