×

உரிய இழப்பீடு வழங்காமல் அமைத்த உயர் மின் கோபுரம் மீது ஏறி விவசாயி திடீர் போராட்டம்: இடைப்பாடி அருகே பரபரப்பு

இடைப்பாடி: இடைப்பாடி அருகே, பவர்கிரிட் நிறுவனம் கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால், உயர்மின்கோபுரம் மீது ஏறி விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து கரூர் வரை, பவர்கிரிட் நிறுவனம் சார்பில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியம், புதுப்பாளையம் வழியாக இப்பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், கொங்கணாபுரம் அருகே பெரியமுத்தம்பட்டி பகுதியில், விவசாயி ஆனந்தன்(60) என்பவருக்கு சொந்தமான நிலத்தில், உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டது. இதற்கு அதிகாரிகள் உரிய இழப்பீட்டை வழங்கவில்லை என அவர் புகார் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில், தனது நிலத்தில் உள்ள அந்த உயர் மின்கோபுரம் மீது, ஆனந்தன் ஏறினார். உரிய இழப்பீட்டை வழங்காவிட்டால், அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து, கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், தாசில்தார் கோவிந்தராஜன் மற்றும் வருவாய்த்துறையினர், விவசாயி ஆனந்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவருக்கு சேர வேண்டிய இழப்பீட்டு தொகை ரூ.2.5 லட்சத்தை நாளையே (இன்று) வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து, 6 மணி நேர போராட்டத்தை கைவிட்டு அவர் கீழே இறங்கினார்.

Tags : struggle ,power tower , Proper compensation, high power tower, farmer, outbreak, intermittent
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...