×

அதிகளவில் புகை கக்கிய ஆட்டோவை நிறுத்தி எச்சரித்த அமைச்சர்

கரூர்: கரூரில் அதிகளவில் புகை கக்கி சென்ற ஆட்டோவை நிறுத்தி அமைச்சர் எச்சரித்து அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் கரூர் வெண்ணெய்மலையில் மாநில அளவிலான ஜூடோ மற்றும் சிலம்ப போட்டிகள் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரு ஆட்டோ வேகமாக வந்தது. அந்த ஆட்டோவில் இருந்து அதிக அளவில் கரும்புகை வெளியேறி அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதை கவனித்த அமைச்சர் பாதுகாப்புக்கு வந்த போலீசாரிடம் அந்த ஆட்டோவை நிறுத்தும்படி கூறினார்.

போலீசார் அந்த ஆட்டோவை மடக்கி நிறுத்தினர். காரில் இருந்து இறங்கிய அமைச்சர் புகை குறித்து டிரைவரிடம் விசாரித்தார். சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் புகை வருகிறது. எரிபொருளில் கலப்படம் செய்து ஓட்டுகிறீர்களா அல்லது இன்ஜினில் பிரச்னை இருக்கிறதா என்று கேட்டார். இப்போது தான் வண்டியை பழுது பார்த்தேன் என அவர் கூறினார். இதையடுத்து நாளைக்குள் (இன்று) இதை சரிசெய்ய வேண்டும். இப்படியே ஆட்டோ ஓட்டினால் வட்டார போக்குவரத்து அதிகாரி மூலம் நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் கடுமையாக எச்சரித்து அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Karur , Excessive, Smoke, Auto, Warning, Minister
× RELATED அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி: செயற்கை சுவாசம் அளிக்கும் நிலை இல்லை