×

இன்று முதல் டி20 நியூசிலாந்து-இந்தியா மோதல்

ஆக்லாந்து: நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா முதல் டி20 ேபாட்டியில் இன்று நியூசிலாந்துடன் மோத உள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அங்கு  5 டி20 போட்டிகளிலும், 3 ஒருநாள்  போட்டிகளிலும்  2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி இன்று ஆக்லாந்து நகரில்  நடைபெற உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்துக்கு பிறகு தொடர்ந்து உள்ளூரிலேயே விளையாடி வந்த  இந்தியா இப்போது நியூசிலாந்து சென்றுள்ளது. உள்நாட்டில் நடந்த  போட்டித் தொடர்களை தொடர்ந்து கைப்பற்றி அசத்தி  வரும் இந்தியாவுக்கு நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது சவாலாகவே இருக்கும். அதிலும் வேகப்பந்துக்கு சாதகமான நியூசிலாந்து ஆடுகளத்தில் ஆரம்பத்தில் ரன் குவிப்பது சிரமம்.

காயம் காரணமாக ஷிகர் தவான் இடம்பெறாதது இந்தியாவுக்கு பின்னடைவுதான். ஆனாலும் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல்  அதனை சமாளிப்பார்கள்.   காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் நியூசியின் வேகம் டிரென்ட் போல்ட் ஆடும் அணியில் இடம் பெறாதது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இந்திய அணி கடந்த ஆண்டு  நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய 3 டி20 போட்டியை  இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.  அதுமட்டுமல்ல இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 டி20 போட்டிகளில் 3ல் நியூசிலாந்தும், 2ல் இந்தியாவும் வென்றுள்ளன.  மேலும் இந்த 2 அணிகளும் இதுவரை மோதிய 12 டி20 போட்டிகளில் நியூசி 8 போட்டிகளில் வென்று முன்னிலையில் இருக்கிறது. இந்தியா 3 போட்டிகளில் வென்றுள்ளது. ஒருப்போட்டி கைவிடப்பட்டுள்ளது. நியூசிக்கு எதிரான டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த எம்எஸ் டோனி(11போட்டி 221ரன்) இல்லாமல் முதல்முறையாக நியூசியை சந்திக்கிறது இந்தியா.

அவரது இடத்தை  கேப்டன் விராட்டின் விருப்ப வீரர் ரிஷப் பண்ட் பூர்த்தி செய்வாரா என்பது  சந்தேகம்தான். லோகேஷ் ராகுலே  விக்கெட் கீப்பராக தொடரும் வாய்ப்பும் இருக்கிறது. அதுமட்டுமல்ல டி20 ேபாட்டிகளில் அதிக ரன் குவித்த கேப்டன்களின் வரிசையில்  டோனியை(1112ரன்), முந்த கோஹ்லிக்கு( 1032ரன்)  இன்னும் 81 ரன் தேவை. அதற்கு இந்த தொடர் உதவலாம். இந்த ஆண்டு டி20 உலக கோப்பை போட்டி  நடைபெற உள்ள நிலையில் தனது திறமையை வெளிக்காட்ட இந்தியா முனைப்புக் காட்டும். அதனை ேகன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து சமாளிப்பதை பொறுத்து இன்றைய ஆட்டத்தில்  வெற்றித்தோல்வி முடிவாகும்.



Tags : clash ,India ,T20 New Zealand , First T20, New Zealand, India
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...