×

காஷ்மீர் விவகாரத்தில் விஷத்தை கக்கி, பொய் தகவலை கூறி சர்வதேச நாடுகளை குழப்புகிறது பாக். : ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நியூயார்க்: ஐ.நா கூட்டங்களில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தை பாகிஸ்தான் தொடர்ச்சியாக எழுப்பி, அதை சர்வதேச விஷயமாக்க முயற்சித்து வருகிறது. ஆனால், அதற்கு எந்த நாடுகளின் ஆதரவும் கிடைக்கவில்லை.   கடந்த வாரம் நடந்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், சீனா மூலமாக காஷ்மீர் விவகாரம் எழுப்பப்பட்டது. ஆனால் மற்ற உறுப்பு நாடுகள், காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு விவகாரம் என கூறிவிட்டன.  இந்நிலையில், ஐ.நா.வின் செயல்பாடு தொடர்பாக இதன் பொதுச் செயலாளர் கட்டரெஸ் வெளியிட்ட அறிக்கை குறித்து ஐ.நா பொதுச் சபையில் பலநாட்டு பிரதிநிதிகள் நேற்று பேசினர். அப்போது ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் சாத் அகமது வாரிச், காஷ்மீர் பிரச்னையை மீண்டும் எழுப்பி பேசுகையில், ‘‘பல ஆண்டுக காலமாக நீடிக்கும் காஷ்மீர் பிரச்னையை தீர்க்கும் பொறுப்பில் இருந்து ஐ.நா எந்த சூழ்நிலையிலும் விலகக் கூடாது,’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து இந்திய துணை தூதர் நாகராஜ் நாயுடு பேசியதாவது: காஷ்மீர் விவகாரம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களையும், கற்பனை நினைவுகளையும் கூறி சர்வதேச நாடுகளை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மீன் தண்ணீருக்குள் சென்று உமிழ்வதைப் போல், பாகிஸ்தானைச் சேர்ந்த குழு ஒவ்வொரு முறையும் காஷ்மீர் விவகாரத்தில் பொய் தகவல்களை கூறி, விஷத்தை கக்குகிறது. சிறுபான்மை மக்களை முற்றிலும் அழித்த ஒரு நாடு, சிறுபான்மை மக்களை பாதுகாப்பதாக கூறுவது ஆச்சர்யமாக உள்ளது. தனது குறையிலிருந்து கவனத்தை திசை திருப்ப பாசாங்கு நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபடுகிறது என்றார்.

Tags : countries ,Kashmir ,Pak ,UN ,India , Kashmir, Pakistan, UN, India
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...