×

எழுமலை அருகே சிறுத்தை கடித்து 2 கன்றுக்குட்டி சாவு: பொதுமக்கள் பீதி

பேரையூர்: எழுமலை அருகே சிறுத்தை கடித்து குதறியதில் 2 கன்றுக்குட்டிகள் இறந்தன. மற்றொரு கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலையில் சிறுத்தை, மந்தி, காட்டுப்பன்றி, மான்கள் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேற்குதொடர்ச்சி மலையிலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் காட்டுப்பன்றிகள் வயல்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

எழுமலையை சேர்ந்தவர் சேகர். இவர் எழுமலை மொட்டனூத்து சாலையிலுள்ள தோட்டத்தில் கொட்டில் அமைத்து பசுமாடு வளர்த்து வருகிறார். 7 பசுமாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகள் உள்ளன. இரவில் வீட்டில் தூங்கிவிட்டு அதிகாலை 4 மணிக்கு பால் கறக்க தோட்டத்திற்கு செல்வது வழக்கம். இன்று அதிகாலை 4 மணிக்கு பால் கறக்க தோட்டத்திற்கு சென்றார். அப்போது கடித்து குதறப்பட்டு இரண்டு கன்றுக்குட்டிகள் இறந்து கிடந்தன. மற்றொரு கன்றுக்குட்டி உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சேகர், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

உசிலம்பட்டி கால்நடை துறையினர் காயமடைந்த கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘பிரேத பரிசோதனைக்கு பிறகே கன்றுக்குட்டிகளை கடித்து கொன்றது சிறுத்தையா அல்லது புலியா என தெரியவரும்’ என்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘சிறுத்தை கடித்து குதறியதில் கடந்த 21ம் தேதி பிச்சைப்பாண்டி என்பவரது தோட்டத்தில் கன்றுக்குட்டி இறந்து கிடந்தது. தற்போது 2 கன்றுக்குட்டிகள் இறந்துள்ளன. இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடப்பதால் தோட்டங்களுக்கு செல்லவே அச்சமாக உள்ளது. இப்பகுதியில் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Ezhumalai 2 ,calf death ,Ezhumalai , Ezhamalai, Leopard, Calf
× RELATED கொடைக்கானல் ஏரியில் காட்டுமாடுகள் விசிட் : பொதுமக்கள் பீதி