×

மேகமலை வனப்பகுதியில் அதிகாரிகள் ஆசியுடன் கொள்ளை போகும் விளைபொருட்கள்: கண்துடைப்பாக ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிப்பு

தேனி: தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் விளையும் ஏலம், காபி, மிளகு போன்றவை அதிகாரிகள் சிலர் ஆசியுடன் பறிக்கப்பட்டு விற்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. வனத்துறை அதிகாரிகள், கண்துடைப்பு பணியாக 3 பேரை பிடித்து  ரூ.30 ஆயிரம் அபராதம் மட்டும் விதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வனப்பகுதி 1 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்டது. வனப்பகுதியையொட்டி ஏராளமான தனியார் எஸ்டேட்கள் உள்ளன. இவற்றை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் அதிகளவில் ஏலம், காபி, மிளகு செடிகள் விளைந்துள்ளன.

இவற்றை ஆண்டுதோறும் சிலர் பறித்து வெளிமார்க்கெட்டில் விற்று வருகின்றனர். இந்த பணிக்கு அருகில் உள்ள எஸ்டேட் தொழிலாளர்களே பன்படுத்தப்படுகின்றனர். ஏலம் உள்ளிட்டவைகளை பறிக்கும் வேலைக்கு வருபவர்களுக்கு தினமும் ரூ.500 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. குறிப்பாக 10க்கும் மேற்பட்டோர் இப்படி ஆள் வைத்து வனவளங்களை சுரண்டி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சில மாதங்களாக மேகமலை வனத்தில் விளையும் பொருட்களை பறித்து வெளிமார்க்கெட்டில் சிலர் விற்று வருகின்றனர். இதுவரை பறிக்கப்பட்ட விளைபொருட்களின் மதிப்பு ரூ. 50 லட்சத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.

இவற்றை பறித்து விற்பனை செய்ய வனத்துறை அதிகாரிகள் சிலரே உடந்தையாக இருந்து வருவதாக தெரிகிறது. விளைபொருட்கள் முழுவதையும் பறித்து முடித்த பின்னர், கண்துடைப்பாக பணியாக 3 பேரை பிடித்து ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். இதன் மூலம் தங்களுக்கும் இந்த சட்டவிரோத செயலுக்கும் சம்பந்தம் இல்லை என வனத்துறையினர் கணக்கு காட்டி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் சிலரிடம் கேட்ட போது, ‘மேகமலை வனப்பகுதியில் விளைந்த பொருட்களை பறித்து விற்பனை செய்வது சட்டவிரோதமாகும்.

வனப்பகுதியில் பறித்த விளை பொருட்களை தனியார் எஸ்டேட்களில் பறித்தாக கணக்கு காட்டுகின்றனர். எங்கள் வனத்துறை அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருக்கலாம். இதனை மறுக்க முடியாது. ஆனால் இதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. ஆதாரம் கிடைத்தால்  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்’’ என்றனர்.

Tags : forest ,Meghamalai ,Megamalai Forest , Megamalai Forest, Loot, Production
× RELATED சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து குறைவு