×

குழந்தை கடத்தலை தடுக்க அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதலாக சிசிடிவி கேமரா: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: குழந்தை கடத்தலை தடுக்க அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் ஓமந்தூரார் மருத்துவ கல்லூரியில் 80 லட்சம் ரூபாய் செலவில் இயற்கை வாழ்வியல் மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் உள்ள அனைத்து தெரபி வசதிகளும் ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிதாக திறக்கப்பட்டு யோகா மற்றும் இயற்கை மையங்களில் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

அதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே பயமோ, பதட்டமோ தேவை இல்லை என்று கூறிய அமைச்சர், நிஃபா, எபோலா வைரஸை எதிர்கொண்டதை போன்று இந்த விவகாரத்திலும் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளிடமும் மத்திய அரசுடன் இணைந்து தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, மருத்துவமனையில் குழந்தை கடத்தலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அனைத்து மருத்துவமனையிலும் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், குழந்தை கடத்தல் தடுப்பதற்கு ஆர்எப்ஐடி என்ற முறை நடைமுறையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : hospitals ,Vijayabaskar ,Minister Vijayabaskar , Child Trafficking, Hospital, CCTV Camera, Minister Vijayabaskar
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...