×

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கத்தை திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு உறுதி: வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் அந்த மாநிலம், இந்தியாவுடன் இணைந்துள்ளது. இந்த நடவடிக்கை திரும்ப பெற முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370 மற்றும், 35ஏ-வை ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், ராணுவத்தினர் குவிக்கப்பட்டதுடன், இணையதளம் மற்றும் மொபைல் சேவைகள் முடக்கப்பட்டது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டது மற்றும் ஊடகங்களுக்கு தடை, இணையதள சேவை முடக்கம் போன்றவற்றை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இநத வழக்குகளை நீதிபதிகள் என்வி ரமணா, எஸ்கே கவுல், ஆர் சுபாஷ்ரெட்டி பிஆர் காவல் மற்றும் சூரிய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், காஷ்மீர் எப்படி இந்தியாவுடன் இணைந்தது என்பதை விளக்கியதுடன், 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது திரும்ப பெற முடியாது என்றும், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி எனவும் கூறினார்.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜிவ் தவான் கூறுகையில், அரசியல் சட்டம் 3வது பிரிவை பயன்படுத்தி, ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு மாற்றியுள்ளது. ஒரு மாநிலத்தை மாற்றியுள்ள மத்திய அரசு, தொடர்ந்து மற்ற மாநிலங்களையும் மாற்றும் வாய்ப்பு உள்ளது. காஷ்மீரில் வேண்டுமென்றே ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது என்று கூறினார். மேலும், முக்கியமான இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. வழக்கின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கை 5 பேர் கொண்ட அமர்வே விசாரிக்கலாமா அல்லது அரசியல் சாசன அமர்வில் விசாரிக்க வேண்டுமா என்பது குறித்து தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.



Tags : Supreme Court ,Center ,SC ,Abrogation , Kashmir, Article 370, Supreme Court, Central Government
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...