×

அசாம் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட 8 தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 644 தீவிரவாதிகள் சரண்: 177 துப்பாக்கிகள் பறிமுதல்

குவஹாத்தி: அசாம் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட 8 தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த சேர்ந்த 644 தீவிரவாதிகள், ஆயுதங்களுடன் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். அசாமில் தனிநாடு, தனி சுயாட்சி பகுதி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்து ஏராளமான ஆயுத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அண்டை நாடுகளான சீனா, மியான்மர், வங்கதேசம் ஆகியவற்றில் முகாம்கள் அமைத்து இந்தியாவுக்குள் பல்வேறு சட்டவிரோத செயல்படுகளில் இந்த இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மத்திய அரசு பல அமைப்புகளை தடை செய்துள்ளன.

இந்த நிலையில், தடை செய்யப்பட்ட 8 அமைப்புகளின் 644 தீவிரவாதிகள் தற்போது சரணடைந்துள்ளனர். உல்ஃபா, என்.டி.எஃப்.பி, ஆர்.என்.எல்.எஃப், கே.எல்.ஓ, சிபிஐ(மாவோயிஸ்ட்) என்.எஸ்.எல். ஏ. ஏபிஎஃப். என்.எல்.எஃப்..பி ஆகியவற்றை சேர்ந்த தீவிரவாதிகள் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரணடைந்துள்ளனர். ஏகே-47 ரக துப்பாக்கிகள், கைத் துப்பாக்கிகள் உள்ளிட்ட 177 ஆயுதங்களையும், வாக்கி டாக்கிகளையும் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அசாமில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் சரணடைந்திருப்பது தற்போதுதான் நடைபெற்றுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அசாம் டிஜிபி பாஸ்கர் ஜோதி மகந்தா, அசாம் போலீஸ் வரலாற்றில் இன்று மிக முக்கிய நாள். 644 தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். முன்னதாக அசாமில் தனி நாடு கேட்டு போராடி வந்த, போரோலாண்ட் தேசிய ஜனநாயக முன்னணி என்ற அமைப்பு, தன் போராட்டத்தை கைவிட்டு ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்தது. இது தொடர்பாக, அசாம் அரசுக்கும் அந்த அமைப்புக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்படத்தக்கது.



Tags : militants ,terrorist organizations ,Assam Assam , Assam, militant groups, militants , surrender
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி