×

கடைசி ஆசை என்ன?...நோட்டீஸ் அனுப்பிய திகார் சிறை நிர்வாகம்: மௌனம் காக்கும் நிர்பயா கொலை குற்றவாளிகள்!

புதுடெல்லி: கடைசி ஆசை என்ன? உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா? என கேட்டு நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் திகார் சிறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட நிர்பயா வழக்கில் முகேஷ் குமார் சிங்(32), பவன் குப்தா(25), வினய் சர்மா(26), அக்ஷய் குமார் சிங்(31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் இம்மாதம் 22ம் தேதி அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் செய்து வந்தது. இந்த நிலையில், குற்றவாளிகளின் ஒருவனான முகேஷ் சிங், தூக்கு தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார்.

குடியரசுத்தலைவர் கருணை மனுவை நிராகரித்தார். கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி, நோட்டீஸ் அனுப்பிய நாளில் இருந்து 14 நாட்களுக்கு பின்னர்தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற விதி இருப்பதால், முகேஷ் சிங்கிற்கு கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கான நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. 14 நாட்களை கணக்கில் வைத்து பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் திகார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஒருபுறம் இருக்க, சிறை விதிகளின்படி, குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு முன் அது குறித்த தகவலை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். இதன்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்புடைய தகவல்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு திகார் சிறை நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குற்றவாளிகளின் கடைசி ஆசைகள் குறித்து சிறை அதிகாரிகள் கேட்டுள்ளனர். மேலும் அவர்களின் குடும்பத்தினரை கடைசியாக சந்திப்பது அல்லது அவர்களின் சொத்துக்களை ஒப்படைப்பது பற்றியும் கேட்டுள்ளனர். இந்த கேள்விகளுக்கு குற்றவாளிகள் எந்த பதிலும் அளிக்காமல் மவுனமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மரண தண்டனை குற்றவாளிகள் தங்கள் குடும்ப உறுப்பினரை கடைசி நேரத்தில் சந்திக்க சட்டம் அனுமதிக்கிறது. அதேபோல் குற்றவாளிகள் தங்கள் சொத்தை யாருக்கு கொடுக்க விரும்புகிறார்கள்? என்றும் கேட்கப்படும். நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் தங்களுக்கு இன்னும் கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதால், இந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.


Tags : Nirbhaya Convicts Silent On Last Wishes Ahead , Nirbhaya, Tihar Prison, Last Wishes, Hanging
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...