×

மீனவரின் உயிர் காக்கும் கடல் காம்பஸ்!

‘எல்லையை தாண்டியதால், மீனவர்கள் அந்நிய நாட்டு கடற்படையினரால் சிறைப்பிடிப்பு, கடலுக்குள் மீன் பிடிக்க படகில் சென்ற மீனவர்கள் மாயம்...’ இது போன்ற செய்திகளை நாம் அன்றாடம் தினசரியில் படித்துக் கொண்டு தான் இருக்கிறோம். நம்மை பொருத்தவரை இது வெறும் செய்தி தான்.
ஆனால் - மீனவர்களுக்கு இது வாழ்வாதாரப் பிரச்னை.

இதற்கு தீர்வே கிடையாதா என்ற கேள்விக்கு ‘‘ஏன் இல்லை... அதற்கான தீர்வை தான் நாங்க அமைத்து தந்திருக்கிறோம்’’ என்கிறார் இன்னாகில் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஷோபனா. இந்தாண்டுக்கான மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் NASSCOM இணைந்து வழங்கியுள்ள புதுமையான ஸ்டார்ட் அப் - வுமன் என்டர்பிரனர் என்ற விருதினை பெற்றுள்ளார்.

‘‘இதற்கான ஆய்வு 2015ம் ஆண்டே துவங்கிட்டோம். நாம் கடற்கரையில் அமர்ந்துக் கொண்டு கடலுக்குள் செல்லும் கட்டுமரத்தை வேடிக்கைப் பார்ப்பது வழக்கம். அவர்கள் சந்தோஷமாக கடலில் பயணம் செய்வதை தான் நாம் கரையோரமாகப் பார்க்கிறோம். ஆனால் கடலுக்குள் அவர்கள் என்ன பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்று நமக்கு தெரிவதில்லை. அவர்களின் உயிரையே பணயம் வைத்துக் கொண்டு தான்  கடலுக்குள் செல்கிறார்கள். 2004ம் ஆண்டு சுனாமியின் போது, பல மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. வருடத்திற்கு குறைந்த பட்சம் முப்பது மீனவர்கள் காணாமலோ  அல்லது இறந்தோ போகிறார்கள்.

கடல் என்பது பெரிய உலகம். நாம் கரையில் இருந்து பார்க்கும் நுரையைக் கக்கும் கடல் வேறு. ஆழ்கடலின் தோற்றம் வேறு. நாள்தோறும் அவை மாறிக்கொண்டே தான் இருக்கும். கரையில் இருந்து 15 கிலோ மீட்டர் கடலுக்குள் சென்று விட்டாலே போதும், நம்மால் அவர்களை தொடர்புக் கொள்ள முடியாது. கைபேசி அலைவரிசையும் கிடைக்காது. மேலும் பலர் எல்லையைக் கடப்பதும் வழக்கமாகி வருகிறது. இதற்கு ஒரு தீர்வு கொண்டு வர வேண்டும் என்று யோசித்தேன். என் நிறுவன தொழில்நுட்ப இயக்குனர் உதயசங்கர் மற்றும் குழுவுடன் இணைந்து யோசித்தோம்’’ என்றவர் கடலுக்குள் சென்றாலும் அவர்களை தொடர்பு கொள்ளும் வகையில் ஒரு பிராஜக்ட்டை துவங்கியுள்ளார்.

‘‘அந்த பிராஜக்ட் பெயர் ‘கடல் காம்பஸ்’. இதன் மூலம் கடலுக்குள் சென்றவர்களால் கரையில் இருப்பவர்களை தொடர்புக் கொள்ளக் கூடிய தொழில்நுட்பத்தை இணைத்திருக்கிறோம். மேலும் கடலுக்குள் மீன் எங்குள்ளது, பாறை இருக்கும் இடம், எல்லை மாறினால் சிக்னல் கொடுப்பது போன்ற முக்கியமான அம்சங்கள் இதில் உள்ளது. மேலும் அவர்கள் விபத்தில் சிக்கினால் எந்த இடத்தில் உள்ளனர் என்பதையும் அறியலாம்.

இந்த கருவியில் முக்கியமான மூன்று கருவிகள் மீனவர்களிடம் இருக்க வேண்டும். ஒன்று வாட்ச், செல்போன் மற்றும் படகில் பொருத்தப்படும் டிஜிட்டல் அட்டை. இது ஒரு மொபைல் அப்ளிகேஷன் மூலமா செயல்படுத்தி இருந்தோம். இன்டர்நெட் வசதி தேவையில்லை. அதற்கான சாஃப்ட்வேர் மட்டும் இருந்தால் போதும். இது மீனவர்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் கொடுக்கும்’’ என்றவர் இதனை தொடர்ந்து அடுத்த கட்ட தொழில்நுட்பத்தை இதில் புகுத்தி முன்னேறியுள்ளார்.

‘‘2015ல் தான் கடல் காம்பஸ் குறித்த பிராஜக்டை ஆரம்பிச்சோம். அந்த கருவியால் மீனவர்கள் எங்குள்ளனர் மற்றும் அவர்கள் ஆழ்கடலில் உள்ள சிக்கல்களை மட்டுமே தெரிந்துக் கொள்ள முடியும். அது மட்டுமே போதாது என்று நினைத்து அதையே அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல முடிவுசெய்தோம். இப்போது நாங்க ஆரம்பிச்சு இருக்கும் திட்டம் பன்மடங்கு ேமம்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. அதாவது இது ஒரு வகையான ரோபோட்டிக் டிரோன். இது தண்ணீரிலும் மிதக்கவும் பறக்கவும் செய்யும். பொதுவாக ஆழ்கடலில் இருந்தால் நமக்கு சிக்னல் கிடைக்காது. கடல் என்பது ஒரு புதையல். அதற்குள் தேடுவது அவ்வளவு சுலபம் இல்லை. ஆழ்கடலில் இருப்பதை ஸ்கேன் செய்தால் தான் நமக்கு தெளிவான விவரங்கள் கிடைக்கும். அதன் படி தான் இதற்கான புரோடோக்காலை அமைச்சிருக்கோம். உயிர் சம்மந்தப்பட்டது என்பதால் ஒவ்வொன்றையும் கவனமாக செயல்படுத்தி வருகிறோம்’’ என்றவர் இதில் சந்திந்த சவால்களை விவரித்தார்.  

‘‘முதலில் டுரோன் குறித்த புரோட்டோக்காலை ஐ.ஐ.டியில் தான் சமர்பித்தோம். அவங்க பார்த்திட்டு நிறைய கேள்விகளை எழுப்பினாங்க. அதாவது மீனவர்கள் விபத்தில் சிக்கிக் கொண்டால், அவர்கள் தண்ணீருக்குள் எங்கு இருக்கிறார்கள் என்று எப்படி அறிவது ? அவர்கள் படகினை எவ்வாறு தேடுவது? தண்ணீருக்குள் தொழில்நுட்பம் எப்படி செயல்படும். அது அங்கும் வேலை செய்யுமா? இப்படி பல கேள்விகளை எழுப்பினாங்க. அது மேலும் எங்களை சிந்திக்க வைத்தது. அதனால் மறுபடியும் ஆய்வில் ஈடுபட்டோம். முதலில் மீனவர்கள் படகில் இருக்கும் போது அவர்கள் கையில் உள்ள வாட்ச் கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். அதுவே அவர்கள் விபத்தினால் அசம்பாவிதம் ஏற்பட்டால் கடலுக்குள் இருப்பவர்கள் எப்படி கண்டு பிடிப்பது. அதற்கு அவர்கள் கையில் இருக்கும் வாட்சு ஆழ்கடலில் இருந்தாலும் அதில் இருந்து நமக்கு சிக்னல் கிடைக்க வேண்டும். அதற்கு சென்சார் அவசியம். அந்த சென்சாரை கொண்டு தான் ஓஷன் புளோட்டர் என்கிற டுரோன் உருவானது.

இந்த டுரோனில் கடலோரக் காவல்படையினர் என்ன தொழில்நுட்பம் பயன்படுத்துகிறார்களோ அதனை இதில் இணைக்க முடியும். அதாவது ஒரு இடத்தில் மீனவர்கள் காணாமல் போனால், அவர்கள் விபத்தில் சிக்கிய இடத்தைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட இடம் வரை இந்த டுரோன் ஸ்கேன் செய்யும். அந்த தூரத்தின் அளவினை நாம் நம் வசதிக்கு ஏற்ப நிர்ணயித்துக் கொள்ளலாம். மேலும் காவல்படையினர் மட்டுமே இந்த டுரோனை செயல்படுத்த முடியும் என்பதால், அவர்கள் கப்பலில் இருந்தே இதனை இயக்க முடியும். அதிலுள்ள கேமரா, கடலில் அது ஸ்கேன் செய்யும் விஷயங்களை நேரடியாக பார்க்க முடியும். 360 டிகிரி கடலின் மேல்பரப்பளவில் ஸ்கேன் செய்யும். அதே போல் 150 அடி ஆழம் வரை கடலுக்குள் என்ன இருக்கிறது என்பதையும் ஊடுறுவும்.

பொதுவாக விபத்து ஏற்பட்டு அதனால் அசம்பாவிதம் நடந்து இருந்தால் அவர்கள் ஆறு அடி ஆழத்தில் தான் மிதப்பார்கள். அல்லது மேல்பரப்பில் மிதந்தாலும் அவர்களை ஸ்கேன் செய்திடும். பேட்டரி கொண்டு இயங்குவதால் ரீசார்ஜ் செய்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. கப்பலிலுள்ள வைஃபை (wifi) மூலம் டுரோனை இணைக்கலாம். அதன் படி வைஃபை சிக்னல் தூரத்தினையும் நம் வசதிக்கு ஏற்ப நிர்ணயித்துக் கொள்ள முடியும். மேலும் டுரோன் ஸ்கேன் செய்யும் அனைத்து விஷயங்களும் கப்பல்படையினரின் மெயின் சர்வரில் பதிவாகிவிடும். இது வானத்திலும் பறக்கும் திறன் கொண்டதால், ஒரு படகினை காவல்படையினர் கண்காணிக்க வேண்டும் என்றால், படகின் அருகே செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த டுரோனை படகு மேல் பறக்க விட்டு கண்காணிக்கலாம்’’ என்றவர் படகினை முழுமையாக ஸ்கேன் செய்யும் வசதியும் இதில் இணைக்க இருப்பதாக திட்டமிட்டுள்ளார்.

‘‘கடல் சார்ந்த தொழில்நுட்பம் குறித்து யாருக்குமே அதிக கவனமில்லை. இதில் பல விதமான தொழில்நுட்பம் அடங்கியுள்ளது, வேலைவாய்ப்புக்கான வாய்ப்பும் அதிகம். மீன் பிடிப்பது மட்டும் இல்லாமல், கடல் சார்ந்த பாதுகாப்பு, ஆய்வு, டூரிசம் என எல்லாவற்றுக்கும் பெரிய அளவில் மார்க்கெட் உள்ளது. கடல் தண்ணீரின் தன்மை, அங்குள்ள கடல் வளம், சீதோஷநிலை... கடல் சார்ந்த தகவல்களை சேகரிக்கலாம். இதன் மூலம் நம் நாட்டின் கடல் சார்ந்த வளத்தை பாதுகாக்க முடியும்’’ என்றவர் மீனவர்களுக்கு படகில் நேவிகேட்டரும் பொருத்தும் வசதியினை குறித்து ஆய்வு செய்து வருகிறார்.   

‘‘கடலுக்கு அடியில் என்ன இருக்குன்னு யாருக்குமே தெரியாது. அதனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் பாதுகாப்பு நமக்கு மிகவும் அவசியம். அவர்கள் கையில் வாட்ச் அணிந்து இருந்தாலும், அவர்கள் படகு எங்குள்ளது என்று தெரிந்துக் கொள்ள படகில் நேவிகேட்டர் என்ற கருவி பொருத்தப்படும். சிறிய அளவு பெட்டி அளவு கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் போன்ற அமைப்பு. அதில் அவர்கள் கடலில் எந்த பகுதியில் உள்ளனர் என்பதை தெரிந்துக் கொள்ள முடியும். வாட்டர் ப்ரூஃப் என்பதால் தண்ணீர் பட்டாலும் பாதிப்பு ஏற்படாது. இந்த நேவிகேட்டர் மீனவர்கள் கையில் கட்டப்பட்டு இருக்கும் வாட்ச் மற்றும் கடலோரக் காவல்படையினர் என இருவரையும் இணைக்கும் தொழில்நுட்பம்.

இதனை பிளாக் செயின் தொழில்நுட்பம் கொண்டு அமைத்திருக்கிறோம். நேவிகேட்டர் பொருத்தப்பட்டுள்ள படகு குறித்த அனைத்து தகவல்களும் பதிவாகிக் கொண்டு இருக்கும். ஆபத்து ஏற்படும் போது காவல்படையினருக்கு சிக்னல் கொடுக்கும் வசதியும் உள்ளது. தற்போது இவை எல்லாம் ஆய்வுக்காக தான் பயன்படுத்தி வருகிறோம். அப்போது தான் தொழில்நுட்ப சிக்கல்கள் தெரிய வரும். அதை எல்லாம் ஒவ்வொன்றாக களைந்து அதற்கு ஒரு முழு உருவம் அடுத்த ஆண்டுக்குள் கொடுக்க இருக்கிறோம்’’ என்றவர் விருது பற்றி விவரித்தார்.

‘‘எங்க நிறுவனத்தை NASSCOMன் ஒரு உறுப்பினராக பதிவு செய்திருக்கிறோம். அதன் மூலம் தான் இந்த விருது பற்றி தெரியவந்தது. மேலும் இவர்கள் முதல் முறையாக  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) உடன் இணைந்து தொழில்நுட்பம் சார்ந்த புதுமையான திட்டத்திற்கு விருது வழங்க இருப்பதாக அறிக்கைவிட்டிருந்தனர். நான் அதற்கு விண்ணப்பித்தேன். விருதும் கிடைச்சது. இந்த விருது மேலும் என்னை ஊக்குவித்துள்ளது. அதனால் 2020க்குள் ஓஷன் புளோட்டருக்கு ஒரு முழு வடிவம் கொடுக்கும் எண்ணம் உள்ளது’’ என்கிறார் ஷோபனா.

தொகுப்பு: ஷம்ரிதி

Tags : Fisherman , Border, fishermen, navy, captive
× RELATED மீனவர் திடீர் சாவு