×

தூத்துக்குடியில் அமையவுள்ள நவீன சுத்திகரிப்பு ஆலை மூலம் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும்: முதல்வர் பழனிசாமி

சென்னை: டி.எல்.எப் நிறுவனத்தின் முதலீடு மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அமையவுள்ள நவீன சுத்திகரிப்பு ஆலை மூலம் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் உதவியுடன், டி.எல்.எப் நிறுவனம், சென்னை தரமணியில் டி.எல்.எஃப். டவுன் டவுன் என்ற பெயரில், டைடல் பூங்கா போன்ற, வர்த்தக ரீதியிலான பணி அமைவிட செயல்திட்டத்தை 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட உள்ளது.

 நவீன தொழில்நுட்பத்திலான கட்டிடங்கள், சாலைகள் என பல்வேறு நவீன வசதிகளோடு 27 ஏக்கர் பரப்பளவில், 68 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இரண்டு கட்டங்களாக கட்டுமான பணிகள்  நடைபெறவுள்ள நிலையில், முதல் கட்டத்தில் 25 லட்சம் சதுர அடி பரப்பளவிலான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதில் பேசிய அவர் கூறியதாவது; தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்க அதிமுக அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். தமிழகத்தில் ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகள், அதன் மூலம் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்கள் மற்றும் உருவாகும் வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை தெரிவித்தார்.

 தூத்துக்குடியில் 49 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூலம் தமிழகத்தின், தென் மாவட்டங்கள் வளர்ச்சிப்பெறும் என முதலமைச்சர் கூறினார். மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலை, போன்ற செயல்படாத நிறுவனங்கள் தமிழக அரசின் முயற்சியால் புத்துயிர் பெறுவதாகவும் அவர் கூறினார். டைடல் பூங்கா போல, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்காக டிட்கோவும், டி.எல்.எப். நிறுவனமும் கூட்டாக பெரிய கட்டிடத்தை ஏற்படுத்துவதாக முதலமைச்சர் கூறினார். இதன் மூலம் 70 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார்

Tags : Palanisamy ,districts ,refinery ,Thoothukudi , Thoothukudi, modern refinery, development, chief minister, Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...