×

நாங்குநேரி பெருமாள் கோயிலில் நாளை ஒரு கோட்டை எண்ணெய் காப்பு: தெப்ப விழா ஏற்பாடுகள் தீவிரம்

நாங்குநேரி: நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் நாளை சுவாமிக்கு ஒரு கோட்டை எண்ணெய்க் காப்பு நடக்கிறது. தொடர்ந்து நடைபெறும் தெப்பத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.108 வைணவத் திருத்தலங்களில் 58-வது தலமாக விளங்கும் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் பல சிறப்புகளை கொண்டது. இத்தலத்தில் வானமாமலை என்கிற தோத்தாத்திரி நாதர் என்ற திருநாமத்துடன் பெருமாள் மூலவராக பட்டாபிஷேகக் கோலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆதிசேஷன் குடை பிடிக்க வைகுண்டத்தில் மகாவிஷ்ணு வீற்றிருப்பது போன்ற திருக்கோலத்தில் இங்கு சுவாமியை தரிசிக்கலாம்.நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு பெருமாளுக்கு ஒரு கோட்டை எண்ணெய்க் காப்பு திருவிழா நாளை (24ம் தேதி) நடக்கிறது.

இதனையொட்டி காலையில் சிறப்பு விஸ்வரூப தரிசனமும், தொடர்ந்து திருமஞ்சனக் குடம் வீதியுலாவும் நடக்கிறது. பின்னர் கருடனுக்கு திருமஞ்சன பூஜை, யாக பூஜை, பெருமாள் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.காலையில் மடாதிபதி மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் மூலவரான வானமாமலைப் பெருமாளுக்கு ஒரு கோட்டை (210 லிட்டர்) நல்லெண்ணெய் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சங்காபிஷேகம், திருமஞ்சன தீர்த்த விநியோகம் நடக்கிறது.மாலையில் பெருமாளுக்கு சந்தனக்காப்பு அலங்கார பூஜையும் இரவு வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கை தாயார், ஆண்டாள், சப்பர வீதி உலாவும் நடக்கிறது.

ஜன. 25, 26ம் தேதி ஆகிய இரு நாட்கள் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. இதற்காக தெப்பக்குளத்தில் நீர் நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் நாங்குநேரி பெருமாள் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர் என்ற எதிர்பார்ப்பில் விழாக்குழுவினர் விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

எண்ணெயின் மகிமை
இத்தலத்தில் மட்டுமே ஆண்டு முழுவதும் வானமாமலை பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் செய்யப்படும் எண்ணெய் சேகரிக்கப்பட்டு நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்தால் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.இந்தப் பிரசாத எண்ணெயானது சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ்கிறது. தீராத சருமநோயால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை வாங்கி கோயில் அருகிலுள்ள சேற்றுத்தாமரை தீர்த்தத்திலிருந்து எடுக்கப்பட்ட மண்ணையும், எண்ணெயையும் கலந்து சருமத்தில் பூசி வந்தால் நாட்பட்ட சரும நோய்கள் பறந்து போகும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த எண்ணெய்க் கிணறு அருகே அகத்தியர் தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறார்.

Tags : temple ,Nankuneri Perumal , A fortress oil,insulation ,Nankuneri Perumal, temple tomorrow
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...