திருப்பதிசாரம் மாநில அரசு விதைப்பண்ணையில் கன்னிப்பூவிற்கு 120 டன் நெல் விதை தயாராகிறது

நாகர்கோவில்:  கன்னிப்பூ சாகுபடிக்கு விநியோகம் செய்ய ஏதுவாக திருப்பதிசாரத்தில் உள்ள மாநில அரசு விதை பண்ணையில் 120 டன் நெல் விதைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.திருப்பதிசாரத்தில் மாநில அரசு விதைப்பண்ணை மற்றும் விதை நெல் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தரமான நெல் விதைகள் அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்களால் விதைச்சான்றளிப்பு துறை அலுவலர்களின் மேற்பார்வையில் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயிகளின் நிலங்களிலும், திருப்பதிசாரம் அரசு விதை பண்ணையிலும் நெல் விதை பண்ணைகள் அமைக்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வல்லுநர் விதையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கரு விதை மற்றும் ஆதார விதைகள் அரசு விதை பண்ணையிலும், அவற்றை பயன்படுத்தி சான்று விதை பண்ணைகள் விவசாயிகளின் நிலங்களிலும் அமைக்கப்படுகிறது.

இவை குமரி மாவட்ட விதை சான்று உதவி இயக்குநரிடம் பதிவு செய்யப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணை அறுவடைக்கு அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு விதை சான்று அலுவலர் அனுமதி அடிப்படையில் பின்னர் வயல்மட்ட விதைகளாக திருப்பதிசாரம் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் விதை குவியல் எண் வழங்கப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது.விதை நெல் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னுரிமை அடிப்படையில் விதை சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. விதை சுத்திகரிப்பு வாயிலாக விதைகளில் கலந்துள்ள உயிரற்ற பொருட்கள், சாதாரண களை விதைகள், நச்சு களை விதைகள், சிதைந்த விதைகள், பிற பயிர்களின் விதைகள், பிற ரக விதைகள் மற்றும் அளவு குறைந்த விதைகள் அப்புறப்படுத்தப் படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட விதை குவியல் சிப்பமிடப்பட்டு விதை மாதிரிகள் எடுக்கப்படுகிறது. இவை விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் முளைப்பு திறன், புறத்தூய்மை, பிற ரக கலவன் மற்றும் ஈரப்பதம் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படுகிறது.

 விதை பகுப்பாய்வு முடிவில் தேர்ச்சி அடையும் பட்சத்தில் அவ்விதைகள் சம்பந்தப்பட்ட விதைச்சான்று அலுவலரால் சான்று செய்யப்பட்ட விதைச்சான்று அட்டைகள் பொருத்தப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலை அடையும். சுத்திகரிப்பு வாயிலாக தரமான சான்று விதை பயிரின் உற்பத்தி திறனை 20 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இனத்தூய்மை மற்றும் புறத்தூய்மை உடைய விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. முளைப்பு திறன் உடையதாக உள்ளதால் விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் மற்றும் லாபம் கிடைக்கிறது. சான்றளிப்பின் மூலம் தரமான கலப்படமற்ற விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. திருப்பதிசாரம் மாநில அரசு விதை பண்ணையில் தற்போது 120 டன் விதைகள் தயார் செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இது தொடர்பாக திருப்பதிசாரம் மாநில அரசு விதைப்பண்ணையில் விதை நெல் வழங்கி வரும்   வடசேரியை சேர்ந்த மகாதேவன் ஐயர் கூறியதாவது: அடுத்த கன்னிப்பூ சாகுபடிக்காக ஏஎஸ்டி 16 ரக நெல் விதைகள் தயார் செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த விதை நெல் பரிசோதனைக்கு பின்னர் சான்று வழங்கப்படும். இங்கு அரசாங்கத்திற்காக விதை நெல் வழங்கும் எனக்கு கிலோவுக்கு ரூ.25 கடந்த ஆண்டு வழங்கி வந்தனர். இந்த ஆண்டு கிலோவுக்கு ரூ.29 வழங்குவதாக கூறியுள்ளனர். நான் இந்த நெல்லை சாதாரணமாக விளைவித்து மார்க்கெட்டில் வழங்கினால் கிலோவுக்கு ரூ.18, ரூ.19 என்ற அளவில்தான் கிடைக்கும். அடுத்து கும்பப்பூவுக்கு டிபிஎஸ்-3 ரகம் தயார் செய்ய உள்ளேன். விதை நெல் சாகுபடி செய்யப்படும்போது மிகுந்த கவனத்துடன் சாகுபடி செய்ய வேண்டும். மேலும் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கும்போது அதிகம் கழிவுகள் போகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விதைப்பண்ணை சுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

திருப்பதிசாரத்தில் உள்ள மாநில அரசு விதைப்பண்ணையில் கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதை சுத்திகரிப்பு நிலையத்தில் செயல்பாடுகளை அவர் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘திருப்பதிசாரம் மாநில அரசு விதைப்பண்ணையில் விதை சுத்திகரிப்பு நிலையம் மூலம் குமரி மாவட்டத்திற்கு தேவையான அனைத்து நெல் ரகங்களும் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது கன்னிப்பூ பருவ நெல் ரகங்களான ஏஎஸ்டி 16 மற்றும் டிபிஎஸ் 5 சுத்திகரிப்பு பணி நடைபெற்று வருகிறது. 2019-20ம் ஆண்டு ஏஎஸ்டி 16 வயல்மட்ட விதைகள் 98.3 மெட்ரிக் டன் மற்றும் டிபிஎஸ் 5 வயல்மட்ட விதைகள் 33.85 மெட்ரிக் டன் வரப்பெற்று சுத்திகரிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கன்னிப்பூ பருவத்திற்கு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது குமரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணபாலன், பூதப்பாண்டி வேளாண்மை உதவி இயக்குநர் ஜோஸ், வேளாண்மை அலுவலர் மகாதேவன், விதை சான்று உதவி இயக்குநர் ஆரோக்கிய அமல ஜெயன், விதை சான்று அலுவலர் சந்திரபோஸ் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

27 சதவீதம் மட்டுமே அரசு வழங்குகிறது

குமரி மாவட்டத்தில் தற்போது 6 ஆயிரம் ஹெக்ேடரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு 280 முதல் 300 டன் வரை விதை நெல் தேவைப்படுகிறது. விதை நெல் அரசாங்கம் 27 சதவீதம் மட்டுமே தயார் செய்து வழங்குகிறது. அந்த அளவுதான் தேவையும் இருந்து வருகிறது. இதனை கொண்டு 1400 ஏக்கர் சாகுபடி செய்ய இயலும். இதர விதை நெல் தேவைகள் விவசாயிகளால் சுயமாகவும், தனியார் விதை பண்ணைகள் வாயிலாகவும் ஈடு செய்யப்படுகிறது. திருப்பதிசாரம் மாநில அரசு விதைப்பண்ணையில் தற்போது வரை 60 டன் விதை நெல் தயார் செய்யப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்டுள்ள நெல் விதைகளை பயன்படுத்துவதன் வாயிலாக 30 சதவீதம் விளைச்சல் அதிகரிக்கும். ஏக்கருக்கு 20 கிலோ போதுமானது ஆகும். ஆனால் பிற விதை நெல் எனில் 50 கிலோ வரை தேவைப்படும். 100 விதைகள் முளைக்கப்போட்டால் 80 விதைகள் அதில் முளைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : 120 tonnes, paddy seed ,ready , cannabis
× RELATED கஞ்சா விற்ற லாரி டிரைவர் கைது