×

1975ம் ஆண்டு கட்டப்பட்டது பாழடைந்த வானொலி கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கும் அவலம்

* வெயில், மழையில் குழந்தைகள் அவதி
* கண்டுகொள்ளாத அதிகாரிகள்: பெற்றோர்கள் குற்றச்சாட்டு

மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகாவுக்கு உட்பட்ட கடலி ஊராட்சியில் நீலாம்பூண்டி பகுதி மக்களுக்காக தனியாக அங்கன்வாடி மையம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடலி  அங்கன்வாடி மையம் துவக்க முதலே 1975ம் ஆண்டு கட்டப்பட்ட வானொலி கட்டிடத்தில் குழந்தைகள் அமர்ந்து பாடம் கற்கும் அவலம் தொடர்கதையாகியுள்ளது. தமிழக அரசு குழந்தை களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகவும் பல்வேறு புதிய திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேல்மலையனூர் தாலுகாவுக்குட்பட்ட தமிழக அரசு ஊரக வளர்ச்சி திட்டத்தின் மூலம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடலி அங்கன்வாடி மையத்தில் 5 வயது வரை உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்து வருகின்றனர். இந்த மையத்தில் பாதுகாக்கப்படும் குழந்தைகளுக்கு போதிய கட்டிட வசதி இன்றி சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீர் தொட்டியின் நிழலில் விளையாட்டு பொருட்களை கொடுத்து விளையாட வைக்கின்றனர்.

 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசால் கிராமங்கள் தோறும் தகவல் பரிமாற்றத்திற்காக கட்டப்பட்ட வானொலி அறையை இன்றளவும் இக்கிராமத்தில் அங்கன்வாடி சமையலறை கூடமாக உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறி
தளவே பரப்பை கொண்ட வானொலி கூடத்தில் உணவு தானியபொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலால் குழந்தைப் பருவத்தில் உள்ள இளம்  மலர்கள் வெயிலிலும், மழையிலும் பல வருடங்களாக அவதியுற்று வருகின்றனர். இதனை வந்து பார்வையிடும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவது வேதனைக்குரியது.

  மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கன்வாடி மையத்தை பலமுறை பார்வையிட்டும் மாணவர்களை பாதுகாப்பற்ற சூழலிலுள்ள குழந்தைகளின் நிலையறிந்து பாதுகாப்பான ஒரு கட்டிடத்திற்குள் கற்கும் சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து சிறுபிள்ளை களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

புதிய கட்டிட பணி முடிவது எப்போது?: பெற்றோர் கேள்வி
தமிழக அரசால் இப்பகுதிக்கு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் 2016-17ம்  நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் 6.5 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடம்  கட்டப்பட்டும் முடிவுறாத நிலையில் இன்று வரை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல்  உள்ளது. ஒப்பந்ததாரர் காலம் தாழ்த்தி வருவதால் தொடர்ந்து பயன்பாட்டுக்கு  கொண்டு வராமல் உள்ளது வேதனைக்குரிய நிகழ்வாக உள்ளது. சிறு குழந்தைகள் கடும்  வெயிலிலும் மழையிலும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வானொலி கட்டிடத்தின்  பின்புறம் உள்ள கோயில் களத்தில் சிமென்ட் தரையில் வைத்து பாதுகாக்கப்பட்டு  வருகின்றனர். மேலும் ஒருசிலர் அங்கன்வாடி வயதுக்கு வந்த பிள்ளைகளை  அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பாமல் வீட்டிலேயே குழந்தைகளை பாதுகாத்து  வருகின்றனர்.

பெற்றோர்கள் இதற்கு காரணம் பாதுகாப்பற்ற முறையில் குழந்தைகள்  மையத்தில் வெட்டவெளியில் தங்கி படிப்பதால் சில பெற்றோர்கள் அனுப்ப முடியாத  சூழ்நிலையில் உள்ளனர். தமிழக அரசு பாழடைந்த வானொலி கட்டிடத்தில் பயிலும்  மாணவர்களின் நலன்கருதி இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது  மிகுந்த வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சிறு குழந்தைகளின் உடல் நலனையும் பாதுகாப்பையும் கருதி உடனடியாக புதிய  அங்கன்வாடி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு ஊராட்சி நிர்வாகம் கொண்டுவர  வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 


Tags : Anganwadi Center ,radio building ,The Anganwadi Center , Anganwadi Center, dilapidated ,radio building , built in 1975
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்