×

இந்திய வரலாற்றில் இதுவே முதன்முறை பிஎஸ்என்எல் ஊழியர்கள் 1 லட்சம் பேருக்கு விஆர்எஸ்: பணி நிறைவடையும் முன்பே வீட்டுக்கு அனுப்ப ஆயத்தம்

இந்த மாத இறுதி நாளான ஜனவரி 31ம் தேதியுடன் சுமார் 1 லட்சம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் பணி நிறைவு பெறுவதற்கு முன்பாகவே விருப்ப ஓய்வு என்ற திட்டத்தின் கீழ் வழி அனுப்பி வைக்கப் போகிறது. ஒரு இந்திய அரசு நிறுவனத்திலிருந்து இவ்வளவு பேரை ஒரே நேரத்தில் வழி அனுப்பி வைப்பது இதுவே வரலாற்றில் முதல்முறை ஆகும்.நாட்டின் தகவல் தொடர்பை மிக உயரத்துக்கு எடுத்து சென்ற பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்) அறிவித்திருந்தது. பிஎஸ்என்எல் ஊழியர்களில் 50 வயதை கடந்தவர்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என நிர்வாகம் அறிவித்தது. 60 வயது வரை பணியில் நீடிக்கலாம் என்று நினைத்திருந்த நிலையில், இவ்வளவு சுலபமாக இத்தனை ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெறுவதற்கு எப்படி சம்மதித்தனர் என்று புரியவில்லை. விருப்ப ஓய்வு பெற்றாலும் 60 வயது வரை மாதந்தோறும் 25 நாட்களுக்கான ஊதியத்தை வீட்டில் இருந்தபடியே பெறலாம். 60 வயது பூர்த்தி அடையும் நாளில் பல லட்சம் ரூபாய் பணிக்கொடையாக வழங்கப்படும் போன்ற ஊழியர்களுக்கு சாதகமான விஷயங்களால் இந்த முடிவை எடுக்க காரணமாக அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு முதலே ஊதியம் உரிய நேரத்தில் கிடைக்காமல் ஊழியர்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், விருப்ப ஓய்வை ஏற்காதவர்கள் இந்தியாவின் எந்த மூலைக்கும் இடமாற்றம் செய்யப்படலாம் போன்ற அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் பரப்பப்பட்டதும் ஊழியர்களை விருப்ப ஓய்வை நோக்கி சென்றுள்ளனர். போதிய லாபம் ஈட்ட முடியாத காரணத்தால் அதை சரி செய்வதற்கு ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று நிர்வாகத்தரப்பில் சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் போது விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களுக்கு பணியாற்றாமலே மாதந்தோறும் ஊதியம் வழங்குவது செலவை எப்படி குறைக்கும் நடவடிக்கையாக இருக்க முடியும் என்பது சாமானியர்களின் கேள்வியாக இருக்கிறது. அதுவுமின்றி வேலை வாங்காமல் ஊதியம் அளிப்பது பெருமளவில் மனித ஆற்றலை வீணடிக்கும் செயலாகும். விருப்ப ஓய்வு அளித்த ஊழியர்களுக்கு கடைசி பணி நாள் வரும் ஜனவரி 31ம் தேதி ஆகும். விருப்பு ஓய்வுக்கு ஒத்துக்கொண்டவர்களில் சிலர் முகம் மிக வாட்டமாக ஏதோ தூக்கு தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் போலும், மருத்துவரால் கெடு அளிக்கப்பட்ட நோயாளிகள் போலவும் அலுவலகத்தில் பணியாற்றுவது மிகவும் சோகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் பல ஊழியர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலை பணியில் இருக்கும் இளைஞர்களுக்கும் கிலியையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தி உள்ளது. பணிக்கொடையாக கிடைக்கும் பெரிய தொகையில் வீடு கட்ட வாங்கிய கடனையோ மகள் திருமணத்தை நடத்த வாங்கிய கடனையோ அடைத்துவிட்டு நிம்மதியாக காலத்தை கழிக்கலாம் என்று சிலர் நிம்மதியாக உள்ளனர். ஆனால் சிலரோ கிடைக்கும் தொகையில் கால்பங்கு தொகை வரியாக பிடித்தம் செய்யப்பட்டுவிடும் என்ற செய்தியால் அச்சத்தில் உள்ளனர். இதனிடையே இவர்களுக்கு கிடைக்கும் தொகையை கவர்வதற்காக உங்களுக்கு கிடைக்கும் பெரிய தொகையை எங்களிடம் முதலீடு செய்யுங்கள், உங்களுக்கு மாதாமாதம் அதிகமான லாபத்தை தருகிறோம் என ரியல் எஸ்டேட், பைனான்ஸ், இன்சூரன்ஸ் ரிசார்ட், எம்எல்எம் உள்ளிட்ட தொழில்களின் முகவர்கள் இவர்களை மொய்த்து வருகின்றனர்.

தவறான இடத்தில் முதலீடு செய்து ஏமாறாமல் இருக்க இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் பிஎஸ்என்எல் நிறுவனம் லாபம் ஈட்டி வளர்ச்சி பாதையில் செல்லும் என்று சிலரும் இதனால் சேவை பாதிப்பு ஏற்பட்டு தனியார் அலைபேசி நிறுவனங்கள் வளர்ச்சி அடைய தான் மறைமுகமாக வழிவகுக்கும் என்று சிலரும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர். காலப்போக்கில் தான் இதற்கு விடை கிடைக்கும். எதுவாயினும் ஒரு நிறுவனம் லாபம் ஈட்டாமல் இருப்பதற்கு பல்வேறு காரணிகள் இருக்கும் போது அதன் தொழிலாளர்கள் மட்டுமே காரணம் என கூறுவது நியாயமான கருத்தாக இருக்க முடியாது. இது பிஎஸ்என்எல் ஊழியர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்று பொதுமக்கள் ஒதுங்கி விடமுடியாது. விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்கள் கடின உழைப்பாளிகளே ஆகையால் அவர்கள் கண்டிப்பாக வேலையில்லாமல் வீட்டில் இருக்க மாட்டார்கள். தங்கள் தகுதிக்கேற்ப ஏதாவது ஒரு வேலையை தேடுவார்கள். குறைந்த ஊதியத்திற்கு கிடைத்த வேலையை செய்யவும் தயாராக இருப்பார்கள்.

எனவே பல இளைஞர்களின் வேலையை இவர்கள் தட்டிப்பறிக்க வாய்ப்புள்ளது. இதனால் நாட்டில் ஏறக்குறைய 80 ஆயிரம் வேலை வாய்ப்புகளை இளைஞர்கள் இழக்க கூடும். தேசத்தின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலனுக்கும் போன்ற காரணங்களுக்காக போக்குவரத்து, மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் அரசு லாப நஷ்ட கணக்கு பார்க்காமல் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். தற்கால சூழ்நிலையில் தகவல் தொடர்பு துறையும் மிக முக்கியமான ஒன்று. ஒருவேளை பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தினால் பின்னடைவை சந்தித்து மற்ற தனியார் அலைபேசி நிறுவனங்கள் மட்டுமே எஞ்சியிருந்தால் அவர்கள் வைப்பதே சட்டமாகிவிடும். சாதாரண அலைபேசி வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வால் பாதிக்கப்படுவார்கள். அதிக அளவில் கல்வி பயிலவும் மிகப்பெரிய மனித ஆற்றல் உள்ள நமது நாட்டில் அரசு வேலை வாய்ப்புகள் மிகக் குறைவே. இந்த சூழ்நிலையில் பொதுத்துறை நிறுவனங்களும் ஆட்குறைப்பு செய்வது மாணவர்கள் மத்தியில் அவநம்பிக்கையும் அச்சத்தையும் ஏற்படுத்தும்.

விருப்ப ஓய்வு திட்டம் என்பது பிஎஸ்என்எல் மட்டுமின்றி மற்ற பொதுத்துறை நிறுவனங்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என நீண்டுக் கொண்டு போகிற வாய்ப்பு உள்ளது.எனவே தற்போது பணியில் இருப்பவர்கள் தங்கள் பணி 50 வயது வரை தான் என முடிவு செய்து அதற்கேற்ப திட்டமிடுதலே சிறப்பு. லட்சக்கணக்கான பேர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்று கூறிவிட்டு தற்போது பணியில் இருப்பவர்களையே வீட்டுக்கு அனுப்புவது எந்த விதத்திலும் நியாயமாகாது. இந்த வழியனுப்புதலை ஓர் இயக்கமாக நடத்தி இது மற்ற நிறுவனங்களில் தொடர அனுமதிக்கக்கூடாது. இது விருப்ப (மில்லா) ஓய்வு ஆகும்.

Tags : Indian ,VRS ,BSNL , BSNL, staff ,Indian h, send home
× RELATED தெற்கு ரயில்வேயில் கடந்த 10 ஆண்டுகளில்...