×

ஆம்பூர் சுற்றுப்பகுதிகளில் அதிகம் தென்படும் பனங்காடையால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஆம்பூர்: ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயிகளின் நண்பன் என அழைக்கப்படும் பனங்காடை அதிகம் தென்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உயிரினங்களில் பறவைகளுக்கு ஒரு தனி மவுசு உண்டு. சுற்றுசூழலின் நண்பனாக திகழும் இந்த பறவைகள் மனிதனது அன்றாட வாழ்வுடன் இணைந்தவை. புறா, கிளி, காகம், குருவி, கழுகு, பருந்து உள்ளிட்ட சில பறவைகளை அன்றாடம் நாம் பார்த்து மகிழ்வது வழக்கம். ஆனால், ஒரு சில சமயங்களில் நமது கண்ணிற்கு வித்தியாசமான, நாம் முன்பு பார்த்திராத பறவைகள் பல கண்ணிற்கு தென்படும். அந்த வகையில் தற்போது ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அதிக அளவில் பனங்காடை காணப்படுகின்றன. புறா அளவில் உள்ள இந்த பறவை நீல நிற சிறகுகளை உடையவை. கண்களை சுற்றி பவள நிறம் காணப்படும். கழுத்தின் அடிப்பாகத்தில் சாம்பல் நிற கோடுகள் அமைந்து தலை நீல நிறத்திலான தொப்பி போன்று காணப்படும்.
பறவைகளில் தைரிய குணத்தை கொண்டுள்ள இந்த பறவை தன்னை விட உருவத்தில் பெரிய காகம் ஆகியவை தனது கூட்டருகே வந்து விட்டால் விரட்டி செல்லும் வல்லமை கொண்டது.  இந்த பனங்காடை என்பது பெரும்பாலும் பனமரத்தின் அருகில் அமர்ந்திருப்பதை நாம் காண முடியும். பட்டுபோன மொட்டை பனைமரத்தை தேர்வு செய்து அதில் தனது கூட்டை இந்த காடை அமைப்பதால் இதற்கு பனங்காடை என்ற பெயர் ஏற்பட்டது.

சங்க இலக்கியங்களில் கானிப்பாடல், பனங்காடை குலம் என தொடங்கும் பாடல்கள் இதன் பெருமையை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. விவசாய பயிர்களை அதிகம் தாக்கும் பூச்சிகள், கதிரை வெட்டும் வெட்டுகிளி ஆகியவற்றை இந்த பனங்காடை தனது உணவாக உட்கொள்கிறது. இதனால், விவசாய பயிர்கள் பாதிப்பு பெருமளவில் தடுப்பதால் இவை விவசாயிகளின் நண்பன் என அன்புடன் அழைக்கப்படுகிறது. ஆம்பூர், மிட்டாளம், பச்சகுப்பம், வெங்கிளி உட்பட பல்வேறு பகுதிகளில் தற்போது அதிக அளவில் இந்த பனங்காடைகள் காணப்படுவதால் விவசாயிகள் மிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீன் கொத்தி போன்ற தோற்றம் கொண்ட இந்த பறவை வரவால் விவசாயிகள் விவசாயத்திற்கு உகந்த சூழல் உருவாகி உள்ளதை இந்த பறவை தெரிவிப்பதாக கூறுகின்றனர்.

Tags : areas ,Ambur ,neighborhoods Farmers , Ambur , Farmers , delighted,much-seen banana
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...