×

முத்துப்பேட்டையில் கோரையாற்றில் கழிவுகள் கொட்டுவது தடுக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதிக்கு வரும் கோரையாறு இப்பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாகவும், பாசனத்தை பெற்றுதரும் முக்கிய ஆறாகவும் உள்ளது. திருவாரூர் தொடங்கி திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், பல பகுதியில் கிளைகளாக பிரிந்து அப்பகுதி விவசாயிகளுக்கு பாசன ஆதாரமாக உள்ளது.இந்த நிலையில் இந்த கோரையாற்றின் வரும் தண்ணீர் முத்துப்பேட்டை அலையாத்திகாட்டை ஒட்டியுள்ள லகூனில் சென்று கடலில் கலக்கிறது. இதில் கடலில் இந்த தண்ணீர் செல்வதை தடுக்கும் வகையில் முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் உள்ள கோரையாற்றில் அமைந்துள்ள (சட்ரஸ்) தடுப்பனையில் தேக்கப்படுகிறது. இந்த தண்ணீர் தேக்கம் மூலம் ஆலங்காடு, கரைதிடல், உப்பூர், கோபாலசமுத்திரம், வீரன்வயல், கழுவங்காடு போன்ற பகுதி விவசாயத்திற்கும், அதேபோல் தடுப்பனை அருகே பிரிந்து செல்லும் பாசன வாய்க்கால் மூலம் ஜாம்புவானோடை பகுதி விவசாயத்திற்கும் மற்றும் அப்பகுதி பல்வேறு வகையில் நீர் ஆதாரத்தையும் பெற்று தருகிறது.

அதேபோல் முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதிக்கும் மிகப்பெரிய நீராதாரத்தையும் பெற்று தருகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோரையாற்றில் பலர் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி வருவதும், அதேபோல் இறால் பண்ணைகளின் ரசாயன கழிவுகள் குடியிருப்புகளின் கழிவுநீர்களை இந்த கோரையாற்றில் விடுவதும் பல ஆண்டுகளாக உள்ளதால் கடல் மாசுபடுவதுடன் கடல் வளமும் கடல் உயிரினமும் அழிந்து வருகிறது.இதில் குறிப்பாக இப்பகுதியில் காலம்காலமாய் உற்பத்தியாகி வந்த பலவகை மீன்கள் உற்பத்தி தடை ஏற்பட்டுள்ளது. அதனால் குப்பைகள் கழிவுகள் களிவுநீர்கள் இதில் விடுவதை அரசு தடை செய்யவேண்டும் என்று இப்பகுதி மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக உள்ளது. ஆனாலும் அதிகாரிகள் அலட்சியத்தால் இவைகள் இதுநாள்வரை தடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சமீபகாலமாக வெளிபடையாகவே கோரையாற்றில் குப்பைகளை கொட்டுவதை பலரும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில் ஆசாத்நகர் கோரையாறு பாலம் ஜாம்புவானோடை இறக்கத்தில் வாகனங்களின் கொண்டு வந்து குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் பலர் கொட்டி வருகின்றனர். அதேபோல் பல இறைச்சி மீன் கழிவுகளையும் அங்கு கொட்டி சுகாதார சீர்க்கேட்டை ஏற்ப்படுத்தி வருகின்றனர்.தற்பொழுது ஆற்றில் தண்ணீர் குறைவாக செல்வதால் இவைகள் அணைத்து அங்கு குவிந்து கிடக்கிறது. இதிலிருந்து வரும் துர்நாற்றம் அப்பகுதியை கடந்து செல்பவர்களின் மூக்கை துளைக்கிறது. இதன் மூலம் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய்கள் பரவவும் வாய்ப்பாக உள்ளது.

ஆகவே மக்கள் நலன் கருதியும் ஆறு மற்றும் கடல் மாசு படுவதை தடுக்கும் வகையில் இப்பகுதியில் குப்பைகள் கழிவுகளை கொட்டுவதை தடுக்கவேண்டும் அப்படி மீறி கொட்டுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், அதனுடன் வரும் காலங்களில் கழிவுநீர் இறால் பண்ணை ரசாயன கழிவுகள் செல்வதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு தடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இப்பகுதி இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Muthupet , waste ,demanded ,Public expectation
× RELATED 7 இடங்களில் 106 டிகிரி வெயில்...