×

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பு அதிமுக எம்.பி.யிடம் கேள்வி கேட்க திரண்ட இஸ்லாமியர்கள்: போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு

தஞ்சை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது குறித்து அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற எம்பி வைத்திலிங்கத்திடம் கேள்வி கேட்க திரண்டு வந்த இஸ்லாமியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை கீழவாசலில் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்தை நேரில் சந்தித்து கேள்விகள் கேட்க அப்பகுதி இஸ்லாமியர்கள் முடிவு செய்திருந்தனர்.ஆட்டுமந்தை தெருவழியாக வந்த 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை கூட்டம் நடக்கும் இடத்துக்கு 300 மீட்டர் தூரத்தில் அரசமரம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

உடனடியாக அங்கு வரவழைக்கப்பட்ட அதிரடிப்படை போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர். அப்போது அங்கிருந்து செல்ல மறுத்த இஸ்லாமியர்கள், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக மாநிலங்களவையில் வாக்களித்த தஞ்சாவூர் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்திடம் சில கேள்விகள் கேட்க அனுமதிக்க வலியுறுத்தினர். ஆனால் அதிரடிப்படை போலீசார் அனுமதிக்க மறுத்து அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு விரட்டியடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அதிமுக கூட்டம் அவசர அவசரமாக முடிக்கப்பட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : Muslims ,voting ,AIADMK , Citizenship Amendment Act, AIADMK MP, Islamists, Police
× RELATED ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 12 ஆயிரம் ஆடுகள் விற்பனை