×

எஸ்.எஸ்.ஐ. கொலைக்கு மூளையாக செயல்பட்டது யார்? 2 தீவிரவாதிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

நாகர்கோவில்: குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிரவாதிகள் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம் (32), நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த தவுபிக் (28) ஆகியோரை கர்நாடக மாநிலம் உடுப்பியில் போலீசார் கைது செய்தனர். பின்னர் குமரி மாவட்டம் கொண்டு வரப்பட்ட இவர்கள், விசாரணைக்கு பின் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்திலும் (உ.பா.) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் நேற்று முன் தினம் மாலையில் எடுத்தனர்.  நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை தொடங்கியது.  எஸ்.பி. நாத் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். நேற்றும் 2-வது நாளாக விசாரணை நடத்தினார். ஏ.எஸ்.பி.க்கள் ஜவகர், விஸ்வேஸ் பி. சாஸ்திரி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். உளவுப்பிரிவு போலீஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

முதற்கட்டமாக கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எங்கே? என்ற ரீதியில் தான் விசாரணை நடந்தது. ஆனால் இருவரும் இதுதொடர்பான விபரங்களை இன்னும் முழுமையாக தெரிவிக்கவில்லை. வில்சன் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டா மற்றும் சம்பவ இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட தோட்டாக்களை போலீசார் வைத்து இருந்தனர். அதை காட்டி துப்பாக்கி தொடர்பான விபரங்களை கேட்டனர். ஏற்கனவே அப்துல் சமீம் மற்றும் தவுபீக் தொடர்பான சில வீடியோ காட்சிகளை போலீசார் கைப்பற்றி இருந்தனர். அந்த பகுதிகளுக்கு இவர்கள் சென்றது ஏன்? என்பது பற்றியும் விசாரணை நடத்தினர். டெல்லி, பெங்களூர் மற்றும் மும்பையில் கைதாகி உள்ள பயங்கரவாதிகளுடன் உள்ள தொடர்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் கேட்டுள்ளனர். குறிப்பாக டெல்லியில் தீவிரவாத செயல்களுக்கு திட்டமிட்டதாக ஐ.எஸ். அமைப்பின் தலைவராக இருக்கும் காஜா மைதீன் (52), அப்துல் சமது (28), சையது அலி நவாஸ் (32) ஆகியோரை என்.ஐ. போலீசார் கைது செய்து இருந்தனர். இதில் சையது அலி நவாஸ், நாகர்கோவிலை சேர்ந்தவர் ஆவார். இவர் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இவர்களுக்கும், காஜா மைதீனுக்கும் உள்ள தொடர்பு குறித்த விவரங்களை கேட்டனர். இதேபோல் பெங்களூரில் கைதானவர்கள் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. அந்த தாக்குதல் திட்டம் தொடர்பான தகவல்கள் இவர்களுக்கு தெரியுமா? எந்தெந்த நகரங்களில் தாக்குதல் நடத்த இருந்தனர்? என்பது பற்றி விசாரணை நடத்தினர். போலீசாரின் பல்வேறு கேள்விகளுக்கு 2 பேரும் பதில் அளித்துள்ளனர். அடுத்த கட்டமாக இவர்களை கேரளா மற்றும் கர்நாடகம் அழைத்து சென்று அங்கு எங்கெங்கு தங்கி இருந்தனர். துப்பாக்கியை பதுக்கி வைத்த இடம் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

தீவிரவாதிக்கு பணபரிமாற்றம் செய்த 3 பேர் கைது


ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் சந்தேகத்திற்கு இடமாக 4 பேர் சுற்றித்திரிவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ ஜெகதீஸ்வரன் தலைமையிலான போலீசார், நேற்று தேவிபட்டினத்தில் தனியார் பள்ளி அருகே நின்றிருந்த 4 இளைஞர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் தப்பிச் சென்றார்.

3 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் எஸ்எஸ்ஐ வில்சனை சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி அப்துல் சமீமுக்கு  பணப்பரிமாற்றம் செய்ததாகவும், முஸ்லீம் இளைஞர்களை திரட்டி மதரஸாக்களில் பயிற்சி அளிக்கவும், ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டுவதற்கான முயற்சியில் இறங்கியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து எஸ்ஐ ஜெகதீஸ்வரன் புகாரின்பேரில், கீழக்கரையைச் சேர்ந்த பிச்சைக்கனி (எ) புறா கனி (43), தற்போது கீழக்கரையில் வசித்து வரும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமீர் (31), முகம்மது அலி (28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய தேவிபட்டினத்தைச் சேர்ந்த ஷேக்தாவூது (37) என்பவரை தேடி வருகின்றனர்.

Tags : Esesai Who ,murder ,extremists ,SI , SI murder, 2 terrorist Inquire
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...