இ-டிக்கெட் முன்பதிவில் முறைகேடு போலி இணையதளத்தை கண்டு ஏமாற வேண்டாம் : மக்களுக்கு ஐஆர்சிடிசி எச்சரிக்கை

புதுடெல்லி: ஐஆர்சிடிசி டூர்’ என்ற பெயரில் செயல்படும் போலி இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்து ஏமாற வேண்டாம்,’ என்று பதிவு செய்துள்ள பயனாளிகளுக்கு ஐஆர்சிடிசி எச்சரிக்கை மெயில் அனுப்பியுள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்துக்கு (ஐஆர்சிடிசி) அண்மையில் இரண்டு புகார்கள் வந்தன. அதில், ஐஆர்சிடிசி இணையதளத்தை போன்ற முகப்பு வடிவமைப்புடன் உள்ள `www.irctctour.com’ என்ற போலி இணையதளம் செயல்படுவதாகவும், அது தன்னை ஐஆர்சிடிசி அமைப்பின் ஒரு அங்கம் என குறிப்பிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பயனாளர்களை எச்சரித்து அவர்களது இணையதள முகவரிக்கு ஐஆர்சிடிசி நிறுவனம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐஆர்சிடிசி.யின் பெயரைக் கூறிக் கொண்டு போலி இணைய தளம் செயல்படுவதாக அண்மையில் இரண்டு புகார்கள் வந்தன. அந்த போலி இணைய தளத்தின் முகவரி, `www.rictctour.com’ ஆகும். இந்த இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வழங்கப்படும் உறுதிப்படுத்தும் ரசீது ஐஆர்சிடிசி.யின் ரசீதை போன்றே உள்ளது. இதையடுத்து, அந்த போலி இணைய தளத்தின் மீது நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த போலி இணைய தளத்தில் மொபைல் எண். 99999 99999, தொலைபேசி எண் +91 6371526046, இ-மெயில் முகவரி irctctours2020@gmail.com என்ற அடையாளத்துடன் ஐஆர்சிடிசி பெயரை பயன்படுத்தி டிக்கெட் விற்பனை செய்து வருகிறது. எனவே, ஐஆர்சிடிசி.யின் பயனாளர்கள் இது குறித்த தகவல்களை தங்களது உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்தி மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வங்கி எண்ணை கேட்பதில்லை

முன்பதிவு அல்லது ரத்து செய்த டிக்கெட் பணத்தை திருப்பி அனுப்புவது  தொடர்பாக, ஐஆர்சிடிசி, எந்தவொரு பயனாளரையும் தொலைபேசி அல்லது இ-மெயில்  மூலம் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு எண், ஏடிஎம் கார்டு விவரங்கள், பின் நம்பர்  அல்லது ஓடிபி குறித்த விவரங்களை கேட்பதில்லை. வாடிக்கையாளர்களுக்கு  ஆன்லைனில் டிக்கெட் வழங்கவும் கேட்டரிங் சர்வீஸ் செய்யவும் இந்திய  ரயில்வேயின் அங்கீகரிக்கப்பட்ட ஒரே இணையதளம் ஐஆர்சிடிசி மட்டுமே’ என்று வழக்கமான சேவை அறிக்கைகளின் மூலமும் மக்களுக்கு ஐஆர்சிடிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐஆர்சிடிசி மெனு கார்டில் மீண்டும் புட்டு, கடலைக்கறி

கேரள மாநிலத்தவர்களின் பாரம்பரிய உணவு வகைகளான அப்பம், முட்டை மசாலா, புட்டு, கடலைக்கறி, பழம் பூரி, கொழுக்கட்டை, உன்னியப்பம், நெய்யப்பம், சுகியான் ஆகியவை ரயில்வே உணவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக, எர்ணாகுளம் எம்பி ஹிபி ஈடன் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், ரயில்களில் மட்டுமின்றி, ரயில் நிலைய சிற்றுண்டி உணவகங்களிலும் கூட கேரள மாநிலத்தவர்கள் பாரம்பரிய உணவு கிடைக்காமல் புறக்கணிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று எம்பி. ஹிபி ஈடனை சந்தித்த ஐஆர்சிடிசி அதிகாரிகள், புட்டு, கடலைக்கறி உள்ளிட்ட கேரள உணவு வகைகள் கொண்ட உணவுப் பட்டியலை அவரிடம் ஒப்படைத்தனர். `ரயில்வே மெனுவில் மீண்டும் புட்டு, கடலைக்கறி இடம் பெற்றுள்ளதால் கேரள மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள்’ என்று ஈடன் கூறினார்.

Related Stories:

>