×

68 பந்தில் சதம் விளாசினார் ராணா விதர்பாவை வீழ்த்தியது டெல்லி

புதுடெல்லி: விதர்பா அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் கடந்த 19ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது. விதர்பா முதல் இன்னிங்சில் 179 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (61.5 ஓவர்). வாசிம் ஜாபர் அதிகபட்சமாக 83 ரன் விளாசினார். அடுத்து களமிறங்கிய டெல்லி அணி முதல் இன்னிங்சில் 163 ரன்னுக்கு சுருண்டது (53.1 ஓவர்). அனுஜ் ராவத் 37, சிமர்ஜீத் சிங் 23* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

16 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் பஸல் 43, சஞ்சய் 57, ஜாபர் 40 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கணேஷ் சதீஷ் 100, வாத்கர் 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 347 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 348 ரன் எடுத்து எதிர்பாராத வகையில் வெற்றியை வசப்படுத்தியது.

குணால் சாண்டிலா 75, ஹிதேன் தலால் 82, கேப்டன் துருவ் ஷோரி 44, லலித் யாதவ் 7 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அதிரடியாக விளையாடி சிக்சரும், பவுண்டரியுமாகப் பறக்கவிட்ட நிதிஷ் ராணா 105 ரன் (68 பந்து, 8 பவுண்டரி, 7 சிக்சர்), அனுஜ் ராவத் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராணா ஆட்ட நாயகன் விருது பெற்றார். டெல்லி அணி 6 புள்ளிகளை தட்டிச் சென்றது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற விதர்பா, 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்யாமல் தொடர்ந்து விளையாடி டிரா செய்திருந்தாலே 3 புள்ளிகள் கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்கு ஆசைப்பட்ட அந்த அணிக்கு அதிர்ச்சி தோல்வியே மிஞ்சியது.

Tags : Delhi ,Rana Vidarbha , 68 Bantam, Chatham, Rana Vidarbha, Falling, Delhi
× RELATED டெல்லியில் பள்ளிகள் திறக்க இப்போது...