×

பணமதிப்பு நீக்கத்தின்போது பல கோடி டெபாசிட் நகைக்கடை உரிமையாளர்களிடம் வருமான வரித்துறை விசாரணை

புதுடெல்லி: பணமதிப்பு நீக்கத்தின்போது வங்கிகளில் பல கோடி ரூபாய் டெபாசிட் செய்த நகைக்கடைக்காரர்கள் பலருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை, உரிய விளக்கம் அளிக்காதவர்களிடம் விசாரணையை துவக்கியுள்ளது. கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு வங்கி கணக்கில் வழக்கத்துக்கு மாறாக அதிக தொகை டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதுபோல், நகைக்கடைக்காரர்கள் சிலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு காரணம், அவர்கள் டெபாசிட் செய்த தொகைக்கும், வருமான வரி தாக்கல் விவரங்களுக்கும் உள்ள வேறுபாடுதான். உதாரணமாக, நகைக்கடைக்காரர் ஒருவர், தனது ஆண்டு வருவாய் ரூ.1.2 லட்சத்துக்குள் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். ஆனால், பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு 3 நாள் நகை விற்பனையில் கிடைத்த தொகையாக ரூ.4.1 கோடி செல்லாத நோட்டு டெபாசிட் செய்துள்ளார்.

இதுபோல், ஆண்டு வருவாய் ரூ.2.7 லட்சம் என கணக்கு காட்டியவர், 2 நாள் நகை விற்பனையில் கிடைத்ததாக ரூ.3.3 கோடி டெபாசிட் செய்துள்ளார், ஆண்டு வருவாய் ரூ.54 லட்சம் என கணக்கு காட்டியவர், ரூ.2.5 கோடி டெபாசிட் செய்துள்ளார்.
மற்றொருவர் ஆண்டு வருவாய் ரூ.26 லட்சம் என கணக்கு காட்டி விட்டு, 2016 நவம்பர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை 573 பேரிடம் பணம் அட்வான்ஸ் பெற்றதாக ரூ.9.6 கோடி டெபாசிட் செய்துள்ளார். ஆனால், பணம் கொடுத்தவர்களின் முகவரி, போன் நம்பர் இல்லை.  இவர்களில் பலர் தாக்கல் செய்த 2016-17 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கில், பணம் டெபாசிட் விவரங்கள் இல்லை. ஆய்வு செய்ததில், பில் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், வர்த்தகம் பல கோடி ரூபாய்க்கு நடந்ததாக கூறப்பட்டுள்ளது. அவர்களின் மின்சார கட்டணம் வெறும் ரூ.1,500தான்.

மற்றொருவர் ஆண்டு வருவாய் ரூ.3.2 கோடி என கணக்கு காட்டியுள்ளார். ஆனால், அவர் டெபாசிட் செய்த செல்லாத நோட்டு ரூ.52 கோடி. ஆனால், 2015 நவம்பர் 11ல் அவரிடம் ரொக்கமாக ரூ.2.6 லட்சம் மட்டுமே இருந்தது என கணக்குகளில் உள்ளது. ஒரே ஆண்டில் இது ரூ.6.2 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 238 மடங்கு அதிகரித்துள்ளது. பெரும்பாலான நகைக்கடைக்காரர்கள் முன்பின் தெரியாத வாடிக்கையாளர்களிடம் ரூ.20,000 முன்பணம் வாங்கியதாக கூறியுள்ளனர்.
இவ்வாறு பலர் அளித்த தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளன. பணமதிப்பு நீக்கம் அன்று நகைக்கடைகளில் பலர் நகை வாங்க குவிந்தனர். எனினும், உரி தாக்குதல் மற்றும் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ததாக கூறியுள்ளனர். உரி தாக்குதல் நடந்த தேதிக்கும், வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கிய தேதிக்கும் முரண்பாடு உள்ளது. இதனால் இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

Tags : jewelery owners ,Income Tax department ,deflation , Money laundering, multi-crore, deposit, jeweler, owner, income tax department, investigation
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...