×

குன்றத்தூர்-போரூர் இடையே கிடப்பில் சாலை விரிவாக்க பணிகள்: விபத்துகள் அதிகரிக்கும் அபாயம்

குன்றத்தூர்:குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து போரூர் வழியாக சென்னையின் மிக முக்கிய பகுதிகளான வடபழனி, கோடம்பாக்கம், தியாகராயநகர், கோயம்பேடு மற்றும் கிண்டி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருவதற்கு குன்றத்தூர்-போரூர் பிரதான சாலையே மிக முக்கியமான சாலையாக உள்ளது. இதனால் இந்த சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. மேலும் குன்றத்தூர் மற்றும் மாங்காடு ஆகிய பகுதிகளை சுற்றிலும் ஏராளமான பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் நிறைந்து காணப்படுவதால், அவற்றை தரிசிக்க சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் தங்களது கார், பஸ் போன்ற வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் வாகன பெருக்கத்தை கருத்தில் கொண்டு குன்றத்தூர்-போரூர் பிரதான சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் கூட, இதுகுறித்து திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அதிமுக அரசு, விரைவில் குன்றத்தூர்-போரூர் சாலை விரிவாக்க பணிகள் முடிக்கப்படும் என்று உறுதியளித்தது. பிறகு ஒரு சில நாட்கள் மட்டும் வேகமாக நடந்து வந்த சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கோவூர் முதல் கெருகம்பாக்கம் வரை சாலையெங்கும் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, கரடு முரடாக பயணிக்க லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது.

இவ்வாறு சேதமடைந்த சாலையில் பயணிக்கும் பெண்கள் மற்றும் வயோதிகர்கள் நிலை தடுமாறி, இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. அதுமட்டுமின்றி பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்கள் இந்த சாலையில் செல்லும் போது, புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் அருகில் உள்ள கடைகளில் தூசு படிந்து பொருட்கள் நாசமாகிறது. இதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “தற்போது குன்றத்தூர் - போரூர் பிரதான சாலையில் கெருகம்பாக்கம் முதல் கோவூர் வரை சாலையில் ஜல்லிக் கற்களை போட்டு வைத்துள்ளதால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மோசமான சாலையால் சுற்றுச் சூழல் கடுமையாக மாசுபாடு அடைந்து, எங்களது வீடு மற்றும் கடைகளில் அதிகப்படியான தூசுகள் படிந்து எங்கும் சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறு மற்றும் கண்ணெரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.


Tags : Road widening ,Kundathoor-Porur ,accidents , Kundathoor-Porur, Road, Works, Accidents, Risk
× RELATED இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி