×

மெரினாவில் புதிதாக அமையும் கடைகளுக்கு குறைந்தபட்சம் மாத வாடகை ரூ.5 ஆயிரம்: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மெரினா கடற்கரையில் சென்னை மாநகராட்சி சார்பில் அமைத்து கொடுக்கப்படவுள்ள கடைகளுக்கு குறைந்தபட்ச மாத வாடகையாக ரூ.5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ரூ.27.04 கோடி செலவில் ஒரே மாதிரியான 900  கடைகளை மாநகராட்சியே அமைத்து கொடுக்க இருப்பதாகவும், கலங்கரை விளக்கம் அருகில் ₹66 லட்சம் செலவில் 300 தற்காலிக மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், பிப்ரவரி முதல் வாரத்தில் கடைகள் கொள்முதல் செய்வதற்காக டெண்டர் கோரப்பட உள்ளது. அந்த கடைகளுக்கு மாத வாடகையாக ரூ.100 வசூலிக்க முடிவெடுக்க பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதிகள், இன்றைய சூழ்நிலையில் ரூ.100 வாடகை என்பது ஏற்புடையதல்ல. மாநகராட்சி எப்படி இவ்வளவு குறைந்த வாடகையை நிர்ணயிக்க முடிவு செய்தது? இந்த கடைகளுக்கு குறைந்த பட்ச வாடகையாக மாதம் ரூ.5 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும். இந்த நீதிமன்றம் 900 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி கடைகளின் எண்ணிக்கையை 1352 என உயர்த்தியுள்ளது. 900 கடைகளுக்கு மேல் ஒரு கடை கூட அனுமதிக்கக்கூடாது.

கடைகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை மார்ச் இறுதிக்குள் இறுதி செய்து 3 மாதங்களுக்குள் கடைகளை கொள்முதல் செய்ய வேண்டும். இதற்கு மேல் டெண்டருக்கான கால அவகாசம் தர முடியாது. கடைகளுக்கு அனுமதி தொடர்பாக தலைமை செயலரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த முடிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை லூப் சாலையில் நடைபாதை அமைக்கும் திட்டம் தொடர்பாக மாநகராட்சி விண்ணப்பித்தும் கடலோர மேலாண்மை ஆணையம் இதுவரை உரிய பதில் அளிக்கவில்லை. எனவே, தமிழ்நாடு மாநில கடலோர மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெயந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags : High Court ,corporation ,High Court orders corporation , Marina, Shop, Minimum, Monthly Rental, Rs 5 Thousand, Corporation, High Court
× RELATED தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி...