×

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒடிசா மாநில பெண் மர்ம மரணம்: கற்பழித்து கொலையா?

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று வீட்டுக்குள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தாள். அவரை யாரேனும் கற்பழித்து கொலை செய்தார்களா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டம், கொரெக்ட்  கிராமத்தை சேர்ந்த திலீப்குமார் என்பவரின் மகள் கரினா பிரியதர்ஷினி (21). அதே மாநிலத்தில் பெர்ஷாம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதாகுமாரி (22). இவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடத்தில் பிரபல பைக் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.

மேலும், இவர்கள் இருவரும் படப்பை அருகே ஆத்தனஞ்சேரி, பெரியார் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று ரஞ்சிதா வழக்கம் போல் வேலைக்கு சென்றார். வீட்டில் கரினா தனியே இருந்துள்ளார். பின்னர் மாலை ரஞ்சிதா வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டுக் கதவு திறந்திருந்த நிலையில் இருந்ததை பார்த்து ரஞ்சிதா சந்தேகித்தார். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு படுக்கையில் கரினா போர்வையை போர்த்திக்கொண்டு படுத்த நிலையில் கிடந்துள்ளார்.

போர்வையை விலக்கி பார்த்தபோது முகம், கழுத்து பகுதியில் நகக்கீறல் காயங்களுடன் கரினா மர்மமான முறையில் இறந்து கிடப்பதை ரஞ்சிதா கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கரினாவின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், கடந்த 2 வருடங்களாக கரினாவும் அவரது சொந்த ஊரை சேர்ந்த மானஸ் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.

சோழிங்கநல்லூர் அடுத்த சிறுசேரி பகுதியில் மானஸ் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் கரினாவும் மானசும் செல்போனில் காரசாரமாக சண்டை போட்டுள்ளனர். இதையடுத்து கரினா மனஉளைச்சலில் இருந்துள்ளார் எனத் தெரியவந்தது. இதையடுத்து சம்பவ தினத்தன்று கரினாவின் வீட்டில் மானஸ் மீண்டும் சண்டையிட்டு, அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்தாரா அல்லது வேறு யாரேனும் கரினாவை கற்பழித்து கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : death ,Odisha ,Sriperumbudur Sriperumbudur ,Odisha State Woman , Sriperumbudur, Odisha State Woman, Mystery Death
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை