×

வெட்டுக்கிளி படையெடுப்பு: சமாளிக்க சோமாலியா நூதன திட்டம்!

‘காப்பான்’ படத்தில் லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகளை படையெடுக்கச் செய்து, வயல்களை அழித்து தஞ்சாவூரை பாலைவனமாக்க திட்டமிடுவான் வில்லன். அந்தக் காட்சிகளைப் பார்த்து ‘லாஜிக்கே இல்லையே?’ என்று நிறைய பேர் விமர்சித்தார்கள். வெட்டுக்கிளி நிஜமாகவே விவசாயிகளுக்கு வில்லன்தான்.

வறுமைக்குப் பேர்போன சோமாலியாவில் வெட்டுக்கிளிகள்தான் அந்நாட்டின் விவசாய உற்பத்தியை ஒட்டுமொத்தமாக பாதிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (Food and Agriculture Organisation), இம்முறை சோமாலியா மற்றும் எத்தியோப்பியா நாடுகளின் வயல்களை வெட்டுக்கிளிகள் ஒட்டுமொத்தமாக சீரழித்துவிட்டன என்று கவலைப்படுகிறது. வருடா வருடம் வெட்டுக்கிளிகள் படையெடுப்பதும், அவற்றை ஆப்பிரிக்க விவசாயிகள் எதிர்கொள்வதும் சகஜம்தான் என்றாலும், கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை நிலைமை படுமோசமாம்.

சுமார் 1,75,000 ஏக்கரில் விளைந்த தானியங்களை மொத்தமாக கபளீகரம் செய்திருக்கின்றன இந்த கொலைகார வெட்டுக்கிளிகள். சோமாலியா விவசாயிகள் தங்களை வெட்டுக்கிளிகளிடமிருந்து காப்பாற்றுமாறு அந்நாட்டு அரசாங்கத்தையும், சர்வதேச அமைப்புகளையும் மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு முறை வெட்டுக்கிளி படையெடுப்பு நிகழ்ந்தால் 1,70,000 டன் அளவுக்கு உணவு  உற்பத்தி பாதிக்கிறதாம். வீணாகும் இவ்வளவு தானியங்கள் ஓராண்டுக்கு பத்து  லட்சம் பேருக்கு உணவு அளிக்கப் போதுமானவை என்பதுதான் பகீர் செய்தி.

இப்போதைய சுற்றுச்சூழல் வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏதுவாகவும் இருந்துத் தொலைக்கிறது என்பது கவலைக்குரிய விஷயம். இப்போதைய வெட்டுக்கிளி படையெடுப்பு ஏப்ரல் 2020 வரை தொடரும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். இதற்கிடையே போதிய உணவு கிடைக்காமல் வாடும் சோமாலியர்கள், தங்கள் உணவுகளை அழிக்க வரும் வெட்டுக்கிளிகளையே உணவாக்கிக் கொள்ளும் நவீன உணவுமுறைக்கு மாறி வருகிறார்கள்.

மத்திய சோமாலியாவில் வசிப்பவர்கள்தான் இந்த கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்கள். கடுப்பேற்றும் வெட்டுக்கிளிகளை வேட்டையாடி வறுத்து, சோற்றுக்கு சைட் டிஷ்ஷாக உண்ண ஆரம்பித்தார்கள். டேஸ்ட் பிரமாதமாம். மீன் வறுவலை விட வெட்டுக்கிளி வறுவல் சுவையில் அள்ளுகிறதாம். வெட்டுக்கிளி உணவுக்கு மருத்துவக் குணங்களும் இருப்பதாக சோமாலியாவாழ் சேலம் சித்தவைத்தியர்களும் பரபரப்பு கிளப்பி வருகிறார்கள். வெட்டுக்கிளியை உண்பவர்களுக்கு முதுகு வலி சரியாகிறதாம். ரத்த அழுத்தம் குறைகிறதாம்.

பேலியோ டயட் கணக்காக இந்த ‘வெட்டுக்கிளி அற்புதம்’ ஆப்பிரிக்காவில் வைரல் ஆகிவருகிறது. இதைத் தொடர்ந்து வெட்டுக்கிளி வறுவல் மட்டுமின்றி, வெட்டுக்கிளி காரக்குழம்பு, வெட்டுக்கிளி அவியல், வெட்டுக்கிளி 65 என்று ஏகத்துக்கும் புதுப்புது டிஷ்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள் அங்கிருக்கும் சமையல்காரர்கள். ரெஸ்ட்டாரன்டுகளுக்கு சாப்பிட வருபவர்கள், ‘வெட்டுக்கிளியிலே என்னென்னப்பா சைட் டிஷ் இருக்கு?’ என்று கேட்குமளவுக்கு நிலைமை ஆகிவிட்டது.

தொகுப்பு: யுவகிருஷ்ணா

Tags : Cope ,Somalia , Fender, grasshopper, Somalia, poverty
× RELATED சில்லி பாயின்ட்…