×

பண்டிகை காலங்களில் அலைமோதுகிறது கூட்டம் நெல்லை ரயில் நிலையத்தில் கூடுதல் முன்பதிவு கவுன்டர்கள் திறக்கப்படுமா?: டிக்கெட் கிடைக்காமல் ரயில்களை தவற விடும் பயணிகள்

நெல்லை: நெல்லை ரயில் நிலையத்தில் கூடுதல் முன்பதிவு கவுன்டர்களை திறக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். பண்டிகை காலங்களில் கூட்டம் அலைமோதுவதால் நுழைவாயிலை தாண்டியும் வரிசையில் பயணிகள் காத்திருக்கின்றனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். சாதாரண தினங்களில் கூட நெல்லையில் இருந்து ெசன்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, செந்தூர், அனந்தபுரி, குருவாயூர் எக்ஸ்பிரஸ்கள் கூட்டத்தை அள்ளிச் செல்கின்றன. பண்டிகை காலங்களில் இந்த ரயில்களில் கழிவறை வரை கூட்டம் காணப்படுகிறது. ரயில்களில் முன்பதிவற்ற பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு டிக்கெட் பெறுவதற்கான கவுன்டர்கள் ரயில் நிலைய பழைய நுழைவாயில் பகுதியில் காணப்படுகிறது. 3 கவுன்டர்கள் அங்கு இருப்பினும் அவற்றில் 2 மட்டுமே எப்போதும் செயல்பாட்டில் உள்ளது. 3வது கவுன்டர் கூட்டம் அலைமோதும் நேரத்தில் மட்டுமே திறக்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அலைமோதும் கூட்டத்தால் முன்பதிவற்ற கவுன்டர்கள் முன்பு கூட்டம் நிரம்பி வழிகிறது.

சமீபத்திய பொங்கல் விடுமுறை முடிந்து பிற நகரங்களுக்கு சென்றவர்கள் சனி, ஞாயிற்று கிழமை மாலை நேரங்களில் முன்பதிவற்ற கவுன்டர்களில் மொத்தமாக திரண்டனர். இதனால் நுழைவாயில் பகுதியில் பொதுமக்கள் நுழைய முடியாத வகையில் வரிசை நீண்டது. இதில் சில பயணிகள் முன்பதிவற்ற டிக்கெட் பெற முடியாமல், கடைசியில் கன்னியாகுமரி, நெல்லை எக்ஸ்பிரஸ்களை தவறவிட்டனர். கவுன்டரில் டிக்கெட் பெற முயலும்போது ரயில் போய்விட்டது என பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

பொங்கல் விடுமுறையை ஒட்டி 3 கவுன்டர்கள் திறக்கப்பட்டிருந்தன. மேலும் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் மூலம் புறநகர் செல்லும் பயணிகளுக்கும் டிக்கெட் வழங்கப்பட்டன. இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே முன்பதிவற்ற டிக்கெட் எடுக்க கூடுதல் கவுன்டர்களை திறக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தின் புதிய கட்டிட நுழைவாயில் பகுதியில் முன்பு ஒரு முன்பதிவற்ற கவுன்டர் செயல்பட்டு வந்தது. முன்பதிவு மையங்கள் மாடியில் இருந்து கீழ்தளத்தில் செயல்பட தொடங்கிய நாள் முதல் அதை இழுத்து மூடிவிட்டனர். இதனால் பயணிகள் புதிய நுழைவாயில் பகுதியில் முன்பதிவற்ற டிக்கெட் எடுக்க வசதிகள் இல்லை. அப்பகுதியிலாவது கூடுதலாக ஒரு முன்பதிவற்ற கவுன்டர் அமைத்தால் பயணிகள் டிக்கெட் பெற்று செல்ல வசதிகள் கிடைக்கும்.

பண்டிகை காலங்களிலும், கூட்ட நெரிசல் உள்ள நாட்களிலும் சென்னை, கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் முன்பதிவற்ற பெட்டிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பயணிகள் மத்தியில் உள்ளது. பொங்கல் விடுமுறை முடிந்து கடந்த 3 தினங்களாக நெல்லை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பல பயணிகள் நின்று கொண்டே பயணிக்கின்றனர். இதை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : peak season , Will the nellai, train station, extra reservation, counters open?
× RELATED திருப்பதியில் 40 நாட்களுக்குப் பிறகு...