×

ஆலங்குளம் உணவகத்தில் வாங்கிய கிரில் சிக்கனில் புழு: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி ஆய்வு

ஆலங்குளம்: ஆலங்குளம் மங்கம்மாள் சாலை குடியிருப்பைச் சேர்ந்தவர் கடந்த வாரம் ஆலங்குளம் ஹோட்டலில் கிரில் சிக்கன் வாங்கியுள்ளார். வீட்டிற்கு கொண்டு சென்று சிக்கனை பிரித்த போது அதில் கொத்து கொத்தாக புழு இருந்துள்ளது. இந்நிலையில் புழுக்கள் உள்ள சிக்கன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் கடந்த 2 தினங்களாக ஆலங்குளம் பகுதியில் பரவியது. இதனையடுத்து மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ்சந்திரபோஸ் உத்தரவின்பேரில் ஆலங்குளம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் கங்காதரன், மணிகண்டன் ஆகியோர் தலைமையில் ஆலங்குளம் பகுதியில் உள்ள உணவகம் மற்றும் இரவுநேர கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உணவகங்களில் உள்ள இறைச்சி மற்றும் உணவு பதார்த்தங்கள் சுகாதாரமான முறையில் பயன்படுத்தப்பட்டதா என ஆய்வு செய்யப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் இருந்த உணவு பதார்த்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் இரவுநேர கடைகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு தரமற்ற பொருட்கள் அழிக்கப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதுபோன்று சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களை பயன்படுத்துவோர் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடையின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. தொடர்ந்து வாரம்தோறும் இதுபோன்ற ஆய்வு நடவடிக்கைககள் நடைபெறும் என உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.


Tags : Grill Chicken, Worm , Alangulam Restaurant, Food Safety Action,Study
× RELATED சேலம், ஈரோட்டில் கொளுத்தும் வெயில்: 12...