×

விலை வீழ்ச்சி எதிரொலி பொங்கல் கரும்பு கட்டுகள் டன் கணக்கில் தேக்கம்: லட்சக்கணக்கில் நஷ்டத்தை எதிர்கொண்ட வியாபாரிகள்

நெல்லை: பொங்கல் கரும்பு கட்டுகள் இந்தாண்டு விற்பனையாகாமல் டன் கணக்கில் தேக்கம் அடைந்துள்ளன. விலை வீழ்ச்சி காரணமாக பொங்கலுக்கு முந்தைய தினம் ஒரு கரும்பு கட்டு ரூ.100க்கு விற்க வியாபாரிகள் தள்ளப்பட்டதால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் பொங்கல் விழா ஆண்டுதோறும் சீரும், சிறப்புமாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் என்றாலே கரும்புகளும், மஞ்சள் குலைகளும் முக்கிய இடம்பிடிப்பது வழக்கம். கடந்தாண்டு பொங்கலையொட்டி வறட்சி காரணமாக கரும்பு வரத்து குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக கரும்பு கட்டுகள் ரூ.400 முதல் 500 வரை விற்பனையானது.

ஆனால் இவ்வாண்டு தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்ததால் கரும்பு விளைச்சல் அதிகம் காணப்பட்டது. பொங்கலையொட்டி முளைக்கும் திடீர் வியாபாரிகளும் அதிகளவில் கரும்பு கட்டுகளை கொள்முதல் செய்து வியாபாரத்தில் அமோகமாக களம் இறங்கினர். ஆனால் விளைச்சல், வரத்துக்கேற்ப பொங்கலையொட்டி மக்கள் மத்தியில் கரும்பு கட்டுகள் விற்பனையாகவில்லை. 15 எண்ணம் கொண்ட ஒரு கரும்பு கட்டு ரூ.350 முதல் 400க்கு தொடக்கத்தில் வியாபாரிகள் விற்றனர்.இறுதிநாளில் கரும்பு கட்டுகள் டன் கணக்கில் தேங்கிக் கிடந்ததால், பொங்கலுக்கு முந்தைய தினம் இரவு நெல்லை சுற்றுவட்டாரங்களில் ஒரு கரும்பு கட்டு ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது. அதையும் பெரிய அளவில் வாங்க பொதுமக்கள் முன்வரவில்லை. இதன் காரணமாக கரும்பு வியாபாரிகள் இவ்வாண்டு கடும் நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளனர். நெல்லை டவுன் ரதவீதிகளில் சில கரும்பு வியாபாரிகள் கரும்புக்கட்டுகளை விற்க முடியாமல் பல்வேறு இடங்களில் அடுக்கி வைத்துக் கொண்டு என்ன செய்வது என தெரியாமல் விழித்து கொண்டிருக்கின்றனர்.

கரும்பு விற்பனை சரிவு குறித்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த மொத்த வியாபாரி முகம்மது கமாலுதீன் கூறுகையில், ‘‘நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ெபரும்பாலும் கரும்பு கட்டுகள் மேலூர், மதுரை மாங்குளம், பொன்னமராவதி, நகரப்பட்டி, நடையனேரி, தஞ்சாவூர் திருக்களுப்பட்டி ஆகிய இடங்களில் இருந்து வருகிறது. கரும்பு இவ்வாண்டு அதிக விளைச்சல் இருந்ததால் வரத்தும் அதிகமாக காணப்பட்டது. வாடிக்கையாளர்களின் வாங்கும் சக்தி குறைந்ததால் விலை குறைவாக இருந்தும், கரும்பு கட்டுகள் தேக்கம் அடைந்தன. வியாபாரிகளுக்கு ஒரு ேலாடுக்கு ரூ.50 ஆயிரம் முதல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மதுரை உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்யும்போது வண்டி வாடகை, ஏற்றுக்கூலி, இறக்கு கூலி என பெரும் தொகை வியாபாரிகளுக்கு செலவாகிறது. வி.கே.புரம் பகுதி கரும்புகளில் இனிப்பு குறைவு காரணமாக பலர் வாங்க முன்வருவதில்லை. நெல்லையில் விளைவிக்கப்படும் கரும்புகள் பெரும்பாலானவை 3 அடிக்கு மேல் வளருவதில்லை. நல்ல கரும்புகள் 7 அடி வரை வளரும் தன்மை கொண்டதாகும். வெளியூரில் இருந்து கொண்டு வரப்படும் கரும்புகள் விற்பனையாகாமல் தேங்கும்ேபாது வியாபாரிகள் பலத்த நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர்’’ என்றார்.

கரும்பின் பயன்கள்
கரும்பின் சாறு சிறுநீரகத்திற்கு நல்ல பலன்களை தரும். உடலில் இருந்து நச்சுக்களை நீக்கும், உடனடி ஆற்றல் கொடுக்கும். வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்கு நல்ல தீர்வை தரும், பல் சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சாப்பிடுவதன் மூலம் பலனை பெறலாம். செரிமானமின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரும்பு சாறு நல்ல நிவாரணம் கொடுக்கும். தொண்டை புண் உள்ளவர்களுக்கு புண் ஆற உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும் கரும்பு உதவுகிறது.

தலைமுறை மாற்றம்
நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கரும்பு விற்பனை ஆண்டுதோறும் குறைந்து வருவதற்கு தலைமுறை மாற்றமும் பிரதான காரணமாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய 4 தினங்களில் கரும்பு கட்டுகளை அள்ளிக்கொண்டு வேன்களிலும், ஆட்டோக்களிலும் செல்வது சமீபகாலமாக குறைந்து வருகிறது. கரும்பை கடித்து சாப்பிடும் பழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருவதால், பலர் சாஸ்திரத்திற்கு 2 கரும்பை மட்டும் பணம் கொடுத்து வாங்கி செல்கின்றனர். தலை பொங்கல்படிக்கு வரும் கரும்புகளை கூட இயந்திரத்தில் பிழிந்து குடிக்கும் நிலை உள்ளது. இதனால் மொத்த விற்பனை சரிந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : Millions ,traders ,losers , Tens ,millions, of losers, face loss ,prices
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...