×

மதுரை - போடி அகல ரயில் பாதையில் உசிலம்பட்டிக்கு நாளை சோதனை ரயில் ஓட்டம்: அடுத்தகட்ட பணிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுமா?

மதுரை: பத்து ஆண்டுகளாக இழுபறியாக நீடித்த மதுரை - போடி அகலரயில் பாதை பணி உசிலம்பட்டி வரை முடிந்துள்ளது. இந்த பாதையில் நாளை சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. அடுத்தகட்ட பணிகளுக்கு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையில் இருந்து, தேனி மாவட்டத்தின் போடி வரையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மீட்டர்கேஜ் பாதையில் ரயில் ஓடிக்கொண்டு இருந்தது. இதை அகலரயில் பாதையாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, 2010, டிச. 3ம் தேதி ரயில்கள் நிறுத்தப்பட்டு, தண்டவாளம் அகற்றப்பட்டது. அதன்பின்னர் அகலரயில் பாதை திட்டத்திற்கான பட்ஜெட் எகிறியது.இறுதியாக, மதுரை - போடி இடையே 90 கி.மீ தூர பாதையில் 8 பெரிய பாலம், 190 சிறிய பாலங்கள் கட்டுவதற்கு 2018ல் ரூ.300 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. முதற்கட்டமாக ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை 37 கி.மீ வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இதில் 2 பெரிய பாலங்களும், 70 சிறிய பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. மதுரை அருகே செக்கானூரணியில் ரயில்வே ஸ்டேஷன் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.பணிகள் முடிந்துள்ள ரயில்பாதையில் நாளை (ஜன. 23) டிராலி ஓட்டமும், ஜன. 24ம் தேதி ரயில் சோதனை ஓட்டமும் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் முன்னிலையில் நடக்கிறது. இதில் தடையில்லா சான்றிதழ் அளிக்கப்பட்டு திருப்தி அளித்த பிறகு, இந்த பாதையில் முதற்கட்டமாக பயணிகள் ரயில்கள் இயக்குவது குறித்து ரயில்வே துறை முடிவு செய்ய உள்ளது. 37 கி.மீ பணிகள் முடிக்க 10 ஆண்டுகள் இழுத்துள்ளது. இன்னும் உசிலம்பட்டியில் இருந்து முதல் போடி வரை 53 கி.மீ தூரம் பணிகள் முடிக்க எத்தனை ஆண்டுகள் இழுக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.ஏனென்றால் உசிலம்பட்டி அருகே ஆண்டிபட்டி கணவாயில் மலை குறுக்கிடுகிறது. இதில் அகலபாதையாக்க இரு பக்கமும் மலையை உடைத்து அகலப்படுத்த வேண்டி உள்ளது. அடுத்தகட்ட பணிக்கான நிதி ஒதுக்கீடும், பணி முடிக்கப்பட்ட மதுரை - உசிலம்பட்டி இடையே முதற்கட்டமாக பயணிகள் ரயில் எப்போது இயக்கப்படும் என்பது குறித்தும் பிப்ரவரியில் தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போடி ரயில் வந்தது எப்படி?.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் விளைபொருட்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தேனி மாவட்டம், போடியில் உள்ள சந்தைக்கு வந்தன. ஆனால் அங்கு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. எனவே இந்த பொருட்களை வடமாநில சந்தைகளுக்கு எடுத்து செல்ல வசதியாக போடியில் இருந்து மதுரை வரை ஆங்கிலேயர் ஆட்சியில் ரயில் பாதை அமைத்து ரயில்கள் இயக்கப்பட்டது. விளைபொருட்களும் மதுரைக்கு ரயிலில் வந்து வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன. அந்த ரயில் பாதை பறிக்கப்பட்டு, 10 ஆண்டுகளாக மீண்டும் அந்த ரயில் எப்போது வரும் என்று மக்கள் ஏங்குகின்றனர்.

திண்டுக்கல்லில் இருந்து பெரியகுளம், தேனி, குமுளி வழியாக சபரிமலைக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணிக்கு பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றும்படி பல கட்ட போராட்டங்களையும் அங்குள்ள மக்கள் நடத்தி உள்ளனர். ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் கிடக்கிறது. தமிழகத்திலுள்ள 36 மாவட்டங்களில் தேனி மாவட்டத்தில் மட்டுமே ரயில் பாதை இல்லை. இதுகுறித்தும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags : Madurai-Bodi ,Usilampatti ,phase ,Madila-Bodi , Madurai-Bodi-wide rail, track , Usilampatti tomorrow, Rail budget , next phase
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...