×

காரியாபட்டி அருகே அரசுப் பள்ளியில் அடிப்படை வசதி ‘அவுட்’: குடிநீர், கழிப்பறை வசதியில்லை: சுற்றுச்சுவர் இல்லாததால் பாதுகாப்பு?

காரியாபட்டி: காரியாபட்டி அருகே, அள்ளாலப்பேரியில் உள்ள அரசுப் பள்ளியில் போதிய அடிப்படை வசதியின்றி மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். காரியாபட்டி அருகே அள்ளாலப்பேரி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் இருபாலர் படிக்கும் அரசு நடுநிலைப்பள்ளி கட்டப்பட்டது. நாளடைவில் மாணவ, மாணவியரின் வருகை அதிகரிப்பால் இடநெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று ஊரில் இருந்து 2 கி.மீ. தொலையில் உள்ள வல்லப்பன்பட்டிக்கு இடையில் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்துக்கு பள்ளி மாற்றப்பட்டது. தற்போது பள்ளியில் 400க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதியின்றி மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். மேலும், பள்ளிக்கு காட்டுப்பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டும். பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் சமூக விரோத செயல்கள் நடந்து வருகின்றன. பள்ளியைச் சுற்றி சீமைக்கருவேல மரங்கள் அடந்து வளர்ந்திருப்பதால் ஆசிரியைகள் பள்ளிக்கு வந்து செல்ல அச்சப்படுகின்றனர். பள்ளியில் உள்ள பொருட்களுக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை. மேலும், பள்ளியைச் சுற்றி சீமைக்கருவேல மரங்கள் இருப்பதால், ஒரு சில மாணவர்கள் தவறான செயல்களில் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் ஆசிரியர்களும், மாணவர்களும் அச்சத்தில் உள்ளன. பள்ளியில் உள்ள கழிப்பறை பராமரிப்பின்றி உள்ளது. பள்ளிக் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மேற்கூரைகளில் பூச்சு பெயர்ந்து உள்ளிருக்கும் கம்பிகள் வெளியே தெரிகின்றன. நல்ல குடிநீர் இல்லை. நன்றாக இருக்கும் கழிப்பறைகளை ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். எனவே, மாணவ, மாணவியரின் நலன் கருதி, அள்ளாலப்பேரி அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டவும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், மாணவ, மாணவியரின் பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Public school ,Kariyapatti ,facilities ,toilet facilities , Kariyapatti, public school, basic facilities, no toilet facilities
× RELATED காரியாபட்டி பேரூராட்சியில் இடியும்...