×

வேலூர் வள்ளலார் பகுதியில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டது பயனற்ற நிலையில் சிறுவர் நீச்சல் பயிற்சி குளம்: அதிகாரிகள் மல்லுக்கட்டால் பூட்டிக்கிடக்கும் அவலம்

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் பயனற்ற நிலையில் உள்ள சிறுவர் நீச்சல் பயிற்சி குளமானது மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மல்லுக்கட்டால் கடந்த 3 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் அவல நிலையில் உள்ளது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் நட்சத்திர ஓட்டல்களுக்கு சொந்தமான நீச்சல் குளங்கள் உள்ளன. இந்த நீச்சல் குளத்தில் குளிக்க ஒருவருக்கு ₹100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வார விடுமுறை மற்றும் பண்டிகை விசேஷ நாட்களில் ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் நீச்சல் குளத்திற்கு சென்று உற்சாகமாக குளித்து மகிழ்வார்கள். குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் கோடைகால விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

கடந்த 2015ம் ஆண்டு சிறுவர்கள் கோடைகால விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீச்சல் பயிற்சி குளம் அமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.  அதன்பேரில், முன்னாள் அமைச்சர் வி.எஸ் விஜய் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாக நீச்சல் பயிற்சி குளம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதற்கென ₹60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நீச்சல் குளத்திற்கான பணிகள் பொதுப்பணித்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டது. சிறுவர்கள், இளைஞர்கள் குளிக்க வசதியாக 6 அடி ஆழம் வரை அமைக்கப்பட்டது. நீச்சல் குளத்தைச் சுற்றிலும் வழுக்காத கிரிப் டைல்ஸ்கள், பதிக்கப்பட்டது.

மேலும், சிறுவர்களுக்கான உடைகள் மாற்றும் அறை, துணிகள் வைக்கும் அலமாரி உள்ளிட்ட நவீன கட்டமைப்புடன் நீச்சல் குளம் கட்டி முடிக்கப்பட்டது. இதனிடையே நீச்சல் குளத்தை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் நீச்சல் குளத்தின் ஆழம் மற்றும் கட்டிட அமைப்பு சில மாற்றங்களை கூறினர். அதனை, உடனடியாக செய்து முடிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனால் நீச்சல் குளம் திறப்பு 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நீச்சல் குளத்திற்கான பணிகள் முடிந்ததா? அல்லது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதா என்பது தெரியாத நிலையில் பூட்டிக்கிடக்கிறது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நீச்சல் குளம் கட்டி முடித்து 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் அதனை திறப்பதற்கான முயற்சியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் முழுமையாக மேற்கொள்ளவில்லை, என்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால், மாநகராட்சி அதிகாரிகளால் இறுதி செய்யப்பட்ட வரைபடத்தின்படிதான் நீச்சல் பயிற்சி குளம் அமைக்கப்பட்டுள்ளது, என்கின்றனர். மாநகாராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மல்லுக்கட்டுவதால், சிறுவர்களுக்காக கட்டப்பட்ட நீச்சல் குளம் பயனற்ற நிலையில் பூட்டிக்கிடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை காலங்களில் நீச்சல்குளம் திறக்கப்படும், என்று எதிர்ப்பார்த்த சிறுவர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இன்னும், 3 மாதங்களில் பள்ளிகளுக்கான கோடைவிடுமுறை தொடங்க உள்ள நிலையில், பயனற்ற நிலையில் உள்ள நீச்சல் பயிற்சி குளத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : Vellore Vallalar ,children ,swimming pool ,area , 60 lakhs worth , swimming pool ,Vellore Vallalar area
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்